ஸ்காபுறோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்
இலங்கைத் தீவின் வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்கள் அனுபவித்த தென்னிலங்கை ஆட்சியாளர்களின் அடக்குமுறை, அந்த அடக்கு முறைகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த தமிழ் இளைஞர் குறி வைத்து தாக்குதல்களையும் கொலைகளையும் நடத்திய இலங்கை அரசின் ஏவல் நாய்களான இராணுவத்தினரின் அச்சுறுத்தல். இவை எளிதில் மறந்து விட முடியாதவை.
இவை போன்ற காரணங்களில் அந்த மாங்கனித்தீவை விட்டு நீங்கி அகதிகளாக பல நாடுகளை நோக்கி படையெடுத்த இலட்சக்கணக்கானவர்களில் கனடா என்னும் அற்புதமான தேசத்தில் அகதிகளாக ‘கைகளை உயர்த்திக் கொண்டு’ குடிவரவு அதிகாரிகளிடம் மன்றாடியவர்கள் இன்று இந்த தேசத்தில் எத்தனையோ உயரங்களைத் தொட்டவர்களாக விளங்குகின்றார்கள்.
அரச பதவிகளிலும் மத்திய மாகாண மற்றும் உள்ளாட்சி அரசுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பெற்ற மக்களி பிரதிநிதிகளாக அத்துடன் பல துறைகளில் பிரகாசிக்கின்றவர்களாக எமது தமிழ் மக்கள் இங்கு திகழ்கின்றார்கள்.
இவ்வாறு எமது தமிழ் மக்கள் சுதந்திரமாக இயங்கும் துறைகளில் கனடாவில் முக்கியமான ஒரு தளமாக விளங்குகின்ற ஊடகத்துறையில் எமது தமிழர்கள் ‘கொடி கட்டி’ பறக்கின்றார்கள் என்றால். அது மிகையானது ஒன்றல்ல.
ஆமாம்! . நாம் விசேடமாகக் குறிப்பிட்ட ஊடகம் என்னும் தளத்தில் வானொலி ஒலிபரப்புத் துறை என்னும் பிரிவில் எம்மவர்கள் இன்று ‘ஒளி வீசும்’ ஒலிபரப்பாளர்களாக விளங்குகின்றார்கள் என்பதை இங்கு பதிவு செய்யும் போது, .அச்சு ஊடகம் ஒன்றில் தொடர்ச்சியாக 30 வருடங்களாக பயணிக்கும் எமக்கும் பெருமையாகவே உள்ளது.
ஆமாம்! கனடாவில் வானொலி ஒலிபரப்புத்துறையில் புகுந்து. தொடர்ச்சியாக அந்தத் துறையில் தக்கவைத்துக் கொண்டு தங்கள் பயணத்தைத் தொடரும் நூற்றுக்கணக்கானவர்களை நாம் நன்கு அறிவோம். அவர்களோடு நட்பு கொண்டாடி வருகின்றோம்.
அந்த வகையில் நமக்கு கிடைத்த தகவல்களின்படி. கனடிய வானொலி ஒலிபரப்புத்துறையில் முதற் தடவையாக தொடர்ச்சியாக 30 மணித்தியாலங்கள் வானொலி கலையகம் ஒன்றில் தனியொருவராக நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய ‘யுகம்’ வானொலி அறிவிப்பாளர் சதீஸ் நடராஜா அவர்களின் ‘வானலைச் சாதனை’ பற்றிய விபரங்களை உலகத் தமிழர்களிடத்தில் கொண்டு சென்று சேர்க்கும் நோக்கம் கொண்டதுதான் இந்த விபரங்கள் அடங்கிய கட்டுரை.
கடந்த டிசம்பர் 2024 வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் 27ம் திகதி சனிக்கிழமை காலை வரை தொடர்ச்சியாக கனடாவில் கலைவேந்தன் கணபதி ரவீந்திரன் மற்றும் பன்முகக் கலைஞர் ரூபி யோகதாசன் ஆகியோரின் நிர்வாகத்தில் இயங்கும் ‘யுகம்’ வானொலி கலையகத்தில் மேற்படி ஒலிபரப்பு சாதனையை நிலை நாட்டிய யுகம் வானொலி நிலையத்தின் அறிவிப்பாளரும் அன்புச் சகோதரருமான சதீஸ் நடராஜா அவர்களின் இந்த சாதனை முயற்சி எவ்வாறு சாத்தியமானது என்பதை நாம் இப்போது பார்ப்போம்.
நாம் முன்னர் குறிப்பிட்ட நமது தாயக மண்ணில் நிலவிய பிரச்சனைகள் காரணமாக கனடாவிற்கு வந்திறங்கிய சதீஸ் நடராஜா அவர்கள் இங்கு எந்த துறைக்குள் புகுந்து கொள்ளலாம் என்பதை தீர்மானிக்கும் முயற்சியில் இருந்தார்.
அப்போது. 1994ம் ஆண்டு தொடக்கம் அவரது மூத்த சகோதரரும் ‘கீதவாணி’ என்னும் வாரத்தில் இரு மணி நேர வானொலி நிலையத்தை நடத்தி வந்தவருமான தற்போதைய ஈஸ்ட் எப் எம் 102.7 வானொலி நிலையத்தின் அதிபர் நடா ராஜ்குமார் அவர்களின் வழிகாட்டலிலும் பயிற்சியிலும் வானொலித்துறைக்குள் கொண்டு செல்லப்பெற்ற ஒரு ‘செல்லப்பிள்ளையாக’ சதீஸ் நடாராஜா விளங்கினார்.
தனது சகோதரரான நடா ராஜ்குமார் அவர்களால் தான் வானொலி நிலையத்தின் கலையகத்தின் ஒலிபரப்பாளருக்கான இருக்கையில்; அமர வைக்கப்பெற்றேன் என்பதை இன்று பெருமையோடு எம்மிடம் பகிர்ந்து கொண்ட சதீஸ் நடராஜா அவர்கள், தனியொருவராக நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி யுகம் வானொலி நிலையத்தில் தான் நிலை நாட்டிய அந்த 30 மணி நேர தொடர்ச்சியான வானொலி ஒலிபரப்பு பற்றிய புளாங்கிதத்தோடு எம்மைச் சந்தித்தார்.
இந்த சவால்கள் நிறைந்த ஒலிபரப்புத்துறை சாதனையை நிலைநாட்ட உதவிய தங்கள் ஊக்கம் தொடர்ப்பாக எம்மோடு பகிர்ந்து கொள்வீர்களா என்று நாம் அவரிடம் ஒரு வினாவை முன்வைத்தோம்.
அதற்கு நமது ஒலிபரப்புத் துறை சாதனையாளர் சதீஸ் அவர்கள் திறந்த மனதோடு பின்வருமாறு கூறுகின்றார்.
‘ எனது வானொலித்துறை சாதனைகள் மற்றும் வளர்ச்சிக்கு என்றும் உறுதுணையாக விளங்குபவர்கள் எனது துணைவியாரும் எனது இரண்டு புதல்விகளுமே ஆவார்கள். நாங்கள் நான்கு பேரும் தனிப்பட்ட குடும்பப் பயணமாக பயணித்தாலும் எனது வானொலித்துறை சார்ந்த வளர்ச்சி பற்றியே உரையாடுவார்கள்.
ஒரு நாள் நெடுஞ்சாலை 401 இல் பயணித்துக் கொண்டிருந்தபோது எனது துணைவியாரும் பிள்ளைகளும் இவ்வாறான ஒரு சாதனை முயற்சியை ஏன் நீங்கள் மேற்கொள்ளக்கூடாது என்று என்னிடம் முன்வைத்தார்கள்.
சில மணிநேரங்களின் பின்னர் அதற்கு நான் சம்மதித்தேன்.
தொடர்ந்து யுகம் வானொலி நிலையத்தின் அதிபர் கணபதி ரவீந்திரன் அவர்களிடமிடம் எனதும் எனது மனைவி மற்றும் பிள்ளைகளின் விருப்பத்தைத் தெரிவித்தேன்.
அவரும் இதற்கு சம்மதம் தெரிவித்து குறிப்பிட்ட திகதிகளில் எனது சாதனை முயற்சியை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தை எனக்களித்தார்.
இதனால் நான் இன்று ஒரு கனடாவில் ஒரு வானொலித்துறை சாதனையாளனாக தலை நிமிர்ந்த நிற்கின்றேன் என்றார் சதீஸ் நடராஜா.
அவருக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்த வண்ணம் தாங்கள் இந்த வானொலித்துறை சாதனையை நிலை நாட்ட முயன்ற போது வானொலி நிலையத்தின் கலைக் கூடத்தில் யார் தங்களோடு கூட இருந்தார்கள் என்று கேட்ட போது சாதனையாளர் சதீஸ் நடராஜா அவர்கள் தனது துணைவியார் ஒருவர் மாத்திரமே என்னோடு அந்த 30 மணி நேரமும் அருகில் இருந்தார் என்று உற்சாகத்துடன் தெரிவித்தார்.
அப்போது தான் நாம் உணர்ந்தோம். நமது குடும்பத்தை விட சிறப்பாக உதவிடக் கூடியவர்கள் வேறு ஒருவரும் இல்லை என்பதே இல்லை என்று.
எமது நேர்காணலை நாம் நிறைவிற்கு கொண்டு வரும் வேளையில் சாதனையாளர் சதீஸ் நடராஜா இன்னுமொரு சாதனை தொடர்பான விடயத்தையும் எம்மோடு பகிர்ந்து கொண்டார்.
“இந்த வருடத்தின் நிறைவிற்கு முன்னர் நான் 50 மணித்தியால தொடர் வானொலி அறிவிப்பு நிகழ்ச்சியை நான் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று எனது துணைவியாரும் பிள்ளைகளும் விரும்புகின்றார்கள்” என்று.
நாமும் அதற்கு எமது ஆதரவு உண்டு என்று கைச் சமிக்கையால் தெரிவித்துவிட்டு விடைபெறுகின்றோம்.