கனடாவில் தொடர்ச்சியாக இசை நிகழ்ச்சிகளில் 100 ஈழத்து ‘பொப்’ இசைப் பாடல்களைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்தும் சாதனையொன்றை நிலை நாட்டியும் ‘நிமிர்ந்து’ நிற்கும் பாடகர் ‘பாபு’
-ஸ்காபுறோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்
இலங்கையில் 50களில் பிறந்தவர்களுக்கும் அதற்குப் பின்னர் பிறந்தவர்களுக்கும் கிடைத்த இனிய இசை அனுபவம் எதுவென்றால், 1970ம் ஆண்டளவில் இலங்கையில் உருவாக்கம் பெற ஆரம்பித்த ‘பொப்’ இசைப் பாடல்கள் ஆகும்.
அன்றைய நாட்களில் இலங்கையில் எந்தப் பகுதியில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகள், மற்றும் ஆலய திருவிழாக்களின் போது ஏற்பாடு செய்யப்பெறும் மெல்லிசை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் திரை இசைப் பாடல்களோடு ஈழத்து ‘பொப்’ இசைப் பாடல்கள் சிலவற்றையாவது எமது ரசிகர் கேட்டும் நடனமாடியும் ரசித்த அனுபவங்கள் எம்மில் பலரின் இதயங்களுக்கு இதமூட்டிக் கொண்டிருக்கின்றன.
இவ்வாறான இனிதான ‘பொப்’ இசைப் பாடல்களை இயற்றியும் இசையமைத்தும் பாடியும் எம்மையெல்லாம் மகிழ்வித்த கலைஞர்களில் பலர் இன்று எம்மோடு இல்லை. காலம் அவர்களைக் காவிச் சென்றாலும் அவர்கள் உருவாக்கிய பாடல்கள் மாத்திரம் ‘சாகா வரம் பெற்றவையாக” இன்னும் எம்மை மகிழ்விக்கின்றன.
இவ்வாறான சாகா வரம் பெற்ற ஈழத்துப் ‘பொப்’ இசைப் பாடல்கள் பலவற்றை தேடித் தேடிப் பெற்று, எம் காதுகளுக்கும் எம் உள்ளங்களுக்கும் கொண்டு வந்து சேர்க்கும் அரிய இசைப் பணியை கனடாவில் ஆற்றிக் கொண்டிருக்கும் எம் மத்தியில் இன்றும் பயணிக்கும் இசைக் கலைஞர் பாபு ஜெயகாந்தன் அவர்களை அறிமுகம் செய்து வைத்து பாராட்டும் நோக்கோடு தான் இந்த கட்டுரை வடிக்கப் பெறுகின்றது
இந்தக் கட்டுரையின் நாயகன் பாபு ஜெயகாந்தன் அவர்கள் 1996ம் ஆண்டு தொடக்கம் வாழ்ந்து வருகின்றார். அவர் கொழும்பில் பிறந்து வளர்ந்து அங்கும் இசைக்குழுக்கள் பலவற்றோடு இணைந்து தனது இசை ஆர்வத்தை வளர்த்து வந்துள்ளார்.
கொழும்பில் வாழ்ந்த காலத்தில் டி ரியுனர்ஸ் மற்றும் சித்தாரா, Thundersparks இசைக்குழு ஆகிய இசைக்குழுக்களில் இணைந்து பணியாற்றி அந்த அனுபவத்தோடு கனடா வந்தார்.
இங்கும் பல இசைக் கலைஞர்களோடும் இசைக் குழுக்களோடும் இணைந்து பல மேடைகளை அலங்கரித்த பாபு ஜெயகாந்தன் அவர்கள் தொடர்ச்சியாக இசைத்துறையை விட்டு விலகிவிடாமல் பயணித்து வருகின்றார்
தற்போது கனடாவில் புகழ்பெற்ற இசைக்குழுக்களில் ஒன்றான ‘லதன் பிரதர்ஸ்’ இசைக் குழுவில் முக்கிய வாத்தியக் கலைஞராகவும் ‘பொப்’ இசைப் பாடகராகவும் விளங்கி வருகின்றார்.
ஈழத்து ‘பொப்’ இசைப் பாடல்கள் மீதான பாடகரும் இசைக் கலைஞருமான பாபு ஜெயகாந்தன் அவர்களின் ஆர்வம் எத்தனையோ வருடங்களாக தொடர்கின்றன.
எனினும் இவை மறைந்து விடக்கூடாது. தொடர்ச்சியாக இசை ரசிகர்கள் மனங்களிலிருந்து இந்த பாடல்கள் விலகி விடாமல் நிற்க எமது மேடைகளில் தொடச்சியாகப் பாடவேண்டும். அத்துடன் 100 ஈழத்து ‘பொப்’ இசைப் பாடல்களை எண்ணிக்கைகளின் தொடர்ச்சியாக பாடி ஒரு சாதனையை நிலை நாட்டுவதன் மூலம் இசை ரசிகர்கள் மனங்களில் அவை நிறைந்த நிற்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தற்போது பாபு ஜெயகாந்தன் அவர்கள் நூறாவது பாடலைப் பாடிய நிறைவோடு எம் மத்தியில் பாராட்டுக்களைப் பெறும் ஒருவராக ஒளிவீசி வருகின்றார்.
ஈழத்து ‘பொப்’ இசைத்துறை முன்னணிப் பாடகராக விளங்கிய ஏ.இ. மனோகரன் அவர்களின் ‘இலங்கை என்பது எம் தாய்த்திருநாடு’ என்ற பாடலோடு ஆரம்பித்த பாபு ஜெயகாந்தனின் 100 பாடல்களைப் பாடும் பயணம் பாபு அவர்களே பாடிய ‘குண்டு மணி குண்டு மணி’ என்னும் பாடலோடு நிறைவு பெற்றுள்ளது. எனினும் அவரது ஈழத்து ‘பொப்’ இசைப் பாடல்கள் மீதான ‘தேடல்’ தொடரும் என்று உறுதியாக எம்மிடன் தெரிவித்துள்ளார். நாம் ரசித்து மகிழும் எமது ஈழத்து ‘பொப்’ இசைப் பாடல்களின் சிறப்பு என்னவென்றால் இவ்வளவு எண்ணிக்கையாக பாடல்களை எமக்களித்தவர்கள், தமிழ் பேசும் பாடகர்கள் மாத்திரமல்ல எச். எம். பெர்ணான்டோ போன்ற ஒரு சில எமது சகோதர மொழிப் பாடகர்களும் அடங்குகின்றார்கள் என்பதே உண்மை.
இறுதியாக ஒரு ‘போனஸ்’ குறிப்பு. :-
இவ்வாறான எமது ஈழத்து ‘பொப்’ இசைப் பாடகர்களில் ஒருவரான அமுதன் அண்ணாமலை அவர்கள் எண்பது வயதைக் கடந்தும் கனடா தேசத்தின் மொன்றியால் மாநகரில் வாழ்ந்து வருகின்றார். அத்துடன் மேலும் சில சிறந்த பொப் இசைப் பாடகர்கள் உலகின் பல நாடுகளிலும் வாழ்ந்து இன்றும் பாடிப் பாடி தங்கள் நாட்களை இனிதாகக் களித்து வருகின்றார்கள். அவர்களில் நித்தி கனகரத்தினம் அவர்கள் Australia விலும் -ஷண் Denmark 🇩🇰 இலும்M.P. பரமேஸ் Germanyயிலும் . பாடகர் முத்தழகு Topal Ragal , M.J.M. Anzar ,விபுலானந்தமூர்த்தி ஆகியோர் இலங்கையிலும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கும் நாம் எமது வாழ்த்துக்களைத் தெரிவிப்போமாக!.