டில்லியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்று ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
டில்லிக்கான காங்கிரஸ் கட்சியின் உத்தரவாதங்களை தெரிவிக்கும் விதமாக பணவீக்கம் இல்லாத திட்டத்தினை கட்சி அறிமுகப்படுத்தியது. அதனை தெலுங்கானா முதல்-அமைச்சர் ரேவந்த் ரெட்டி அறிமுகம் செய்து வைத்தார். அப்போது டில்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்தர யாதவ் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் உடனிருந்தனர். அப்போது நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய தெலுங்கானா முதல்-அமைச்சர், “டில்லியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், கட்சி அதன் ஐந்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும்.” என்று தெரிவித்தார். ஜீவன் ரக்ஷா யோஜனா என்ற பெயரில் ரூ.25 லட்சம் மருத்துவக்காப்பீடு வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி முன்னதாக வாக்குறுதி அளித்திருந்த நிலையில், தற்போது 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் சமையல் எரிவாயு ரூ.500-க்கு வழங்கப்படும் என்றும் இலவச ரேஷன் கிட் வழங்கப்படும் என்றும் காங்ரஸ் கட்சி அறிவித்துள்ளது. 70 உறுப்பினர்களை கொண்ட டில்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.