108-வது பிறந்தநாளையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
அதிமுக நிறுவனத்தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி, சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை, தலைமைக் கழக எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். உருவச்சிலைக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத்தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமைக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் எம்.ஜி.ஆர். சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அதிமுக கட்சி கொடியை ஏற்றி வைத்து 108 கிலோ எடை கொண்ட கேக்கை வெட்டி கழக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி இனிப்பு வழங்கினார்.