உக்ரைன் மீதான ரஷியாவின் போர் தீவிரமாகி உள்ளது. உக்ரைனுக்குள் நுழைந்து ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல் பதிலடியாக ரஷியா மீது உக்ரைனும் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளன. அவற்றின் உதவியால் உக்ரைன் இன்னும் போரில் தாக்குப்பிடித்து நிற்கிறது. இந்த போரில் இரு நாடுகளும் சமீப காலமாக மாறிமாறி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில் உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா சரமாரி டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் அங்குள்ள பல அடுக்குமாடி கட்டிடங்கள் சேதமடைந்தன. இதனையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருந்தபோதும் இந்த தாக்குதலில் சிக்கி 3 பேர் பலியாகினர். அதே நேரத்தில் நாட்டின் தெற்கில் நடந்த இரண்டு தாக்குதல்களில் மேலும் மூன்று பேர் கொல்லப்பட்டனர் என்று உக்ரைன் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக நாடாளுமன்றக் குறைதீர்ப்பாளரான டிமிட்ரோ லுபினெட்ஸ், “ரஷியப் படைகள் ஆரம்பத்தில் டிரோன்களை ஏவின, பின்னர் ஒரு பாலிஸ்டிக்-ஏவுகணை தாக்குதலை நடத்தின” என்று சமூக ஊடகங்களில் அவர் பதிவிட்டுள்ளார்.