சுதந்திரமாக தமது அரசியல் தலைவிதியைத் தீர்மானிக்கப் போராடும் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பான பொதுவான கோரிக்கைகளை உள்ளடக்கிய பொங்கு தமிழ் பிரகடனம் வெளியிடப்பட்டு 24 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் திகதி பல்கலைக்கழகக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள பொங்கு தமிழ் நினைவுத்தூபிக்கு முன்பாக 24 வருட பூர்த்தி நிகழ்வுகள் இடம்பெற்றதாக பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அவ்வேளையில் பல்கலைக்கழகத்தில் பயிலும் தமிழ் மாணவர்கள் பலர் கலந்துகொண்டிருந்ததாகவும் அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர்.
பொங்கு தமிழ் பிரகடனம் அல்லது தமிழ் எழுச்சி பிரகடனம் ஜனவரி 17, 2001 அன்று வெளியிடப்பட்டது.
இந்த பிரகடனத்தில் சுயநிர்ணய உரிமை, பாரம்பரிய தமிழர் தாயகம், தமிழ் தேசியம் ஆகியவற்றின் அடிப்படையிலான தமிழ் மக்களின் ஒன்றுபட்ட அபிலாஷைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், அதனை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மைத்திரி – ரணில் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பை இலங்கையின் புதிய அரசமைப்புச் சட்டமாக ஏற்றுக்கொள்ளும் நோக்குடன் புதிய அரசாங்கம் செயற்பட்டு வருவதாக இதன்போது உரையாற்றிய யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் எஸ்.சிவகஜன் தெரிவித்தார்.
“தமிழ் மக்களுக்கான தீர்வு என்பது ஒற்றையாட்சி அரசியல் அமைப்புக்கு உட்படாத 13ஆவது திருத்தத்திற்கு அப்பாற்பட்டது. உருவாக்கப்படலாம் என சொல்லப்படுகின்ற இலங்கையின் மூன்றாவது குடியரசு அரசியல் யாப்பில் ஏக்கிய ராஜ்ஜிய என்னும் பெயரிலே ஏற்கனவே நல்லாட்சிக் கால அந்த அரசு வரைந்த அந்த யாப்பினுடைய தொடர்ச்சியை மீளவும் வரைந்து தமிழ் மக்களினுடைய தலையில் மீளவும் தமிழ் மக்களின் பிரநிதிகளைக் கொண்டே இந்த யாப்பை ஏற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும் என்பதில் ஸ்ரீலங்கா அரசு மிகவும் முனைப்புடன் இருக்கின்றது.”
2016ஆம் ஆண்டு தமிழ் மக்கள் பேரவையினால் உருவாக்கப்பட்ட முன்மொழிவுகளே தமிழ் மக்களுக்கான சிறந்த தீர்வாக அமையும் என மாணவர் சங்கத் தலைவர் வடக்கிலுள்ள தமிழ் அரசியல்வாதிகளிடம் கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.
“இந்த நேரத்தில்தான் அனைத்து தமிழ்த் தேசிய கட்சிகளையும் நோக்கி ஒன்றை முன்வைக்கின்றோம். 13ஆவது திருத்தத்திற்கு உட்பட்ட ஏக்கிய ராஜ்ஜியவுடன் தொடர்புடைய எந்தவொரு அரசியல் அமைப்பு முயற்சிகளுக்கும் உடன்படாத அவற்றை எதிர்ப்பதிலும் குறிப்பாக தமிழ் மக்கள் பேரவையினால் முன்வைக்கப்பட்ட தீர்வு திட்டம்தான் தற்போது வரையில் தமிழ் மக்கள் சாரந்து மிகப்பொருத்தமான சரியான தீர்வு திட்டமாக எங்கள் முன்னால் இருக்கிறது.”
இலங்கைக்கான புதிய அரசியலமைப்பு தயாரிப்பின்போது ஒற்றையாட்சியை நிராகரித்து, சமஷ்டி கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்ட யாப்பை உருவாக்குவதற்கு புதிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் வடக்கில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையில் கடந்த வருட இறுதியில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டன.
புதிய அரசியலமைப்பு தயாரிப்பில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து கலந்துரையாடுவதே கலந்துரையாடலுக்கு தலைமை தாங்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நோக்கமாக இருப்பதோடு, 2016 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் பேரவை முன்வைத்த முன்மொழிவுகளின் அடிப்படையில் இந்த பேச்சு நடைபெறுகின்றன.
மைத்திரி – ரணில் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு வரைபை இலங்கையின் புதிய அரசியல் அமைப்பாக ஏற்கவும், பௌத்தத்திற்கான முன்னுரிமையை பாதுகாக்கவும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கம் விருப்பத்தை வெளியிட்டுள்ளது.
பொங்கு தமிழ் நினைவுத்தூபி
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முயற்சியில் 2018 செப்டெம்பர் 17 ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொங்கு தமிழ் நினைவுத்தூபி திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அப்போதைய யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் இரத்தினம் விக்னேஸ்வரன், பொங்கு தமிழ் நினைவுத்தூபி தமிழ் மக்களின் உரிமைச் சின்னமாக அமையும் என தெரிவித்திருந்தார்.