புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் சட்டவிரோத கல்குவாரிக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை வழக்கில் லோரி உரிமையாளர் உட்பட 4 பேரை காவல்துறை கைது செய்துள்ளனர். இதனையடுத்து, சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி ஏன் இவ்வளவு அவசரப்படுகிறார் என புரியவில்லை என்று அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், “புதுக்கோட்டை அதிமுக முன்னாள் கவுன்சிலர் தஜெபகர் அலி உயிரிழந்த சம்பவத்தில் முதல் கட்டமாக லாரி டிரைவர் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிரமான விசாரணை நடந்து வருகிறது. விரைவில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். சம்பவம் நடந்து சில மணி நேரங்களிலேயே சந்தேகத்திற்கிடமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் எடப்பாடி ஏன் இத்தனை அவசரப்படுகிறார் என்று புரியவில்லை. லோரி ஓட்டிச்சென்ற லோரி ஓட்டுநரை கைது செய்தது வழக்கை திசை திருப்பும் செயலா? முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி அடிப்படை புரிதல் கூட இல்லாமல் இவ்வாறு அவதூறு பரப்பலாமா? தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தையே தொலைக்காட்சியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று சொன்னவர்தானே என்று கடந்து போக வேண்டுமா?” என்று பதிவிட்டுள்ளார்.