மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு தொடர்பான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2019ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து பேசியது சர்ச்சையானது. இதுதொடர்பாக பாஜக தொண்டர் நவீன் ஜா என்பவர் ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு தடை செய்யக் கோரியும், வழக்கை தள்ளுபடி செய்யக் கோரியும் ராகுல் காந்தி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, ராகுல் காந்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் அல்லாத ஒருவர் எப்படி புகார் அளிக்க முடியும்” என்று வாதிட்டார். இதனைத் தொடர்ந்து, மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கை விசாரிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.