தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரும், நடிகருமானவர் சுந்தர் சி. சமீபத்தில் இவரது இயக்கத்தில் விஷால் நடிப்பில் ‘மதகஜராஜா’ திரைப்படம் வெளியானது. கடந்த 2012-ம் ஆண்டு உருவான இப்படம் ஒரு சில காரணத்தால் வெளியாகாமல், கடந்த 12-ந் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று சுந்தர் சி தனது 57-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்களும் திரைபிரபலங்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் விஷால் சுந்தர் சி-க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “எனது அன்பான மூத்த சகோதரருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இயக்குனர், எனது சிறந்த நண்பர், என் வாழ்க்கையில் நான் சந்தித்த சிறந்த மனிதர்களில் ஒருவர், சுந்தர் சி சார். உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் மேலும் மேலும் வெற்றி அடைய கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார். முதலில் உங்கள் குடும்ப உறுப்பினராகவும், பிறகு நடிகராகவும் உங்களை வாழ்த்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன். எனக்கு ஒரு சூப்பர் வெற்றியைக் கொடுத்ததற்கு நன்றி. என்ன வந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கவும் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்தவும் என் மருத்துவர்கள் பரிந்துரைத்ததை விட நீங்கள் எப்போதும் எனக்கு மருந்தாக இருந்தீர்கள். உங்கள் பிறந்த நாளை இனிமையாக கொண்டாடுங்கள், இது உங்கள் ஆண்டு! கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார். நம் மேஜிக் காம்போ மீண்டும் ஒன்றாக திரையில் வர ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று அதில் பதிவிட்டுள்ளார்.