அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அமெரிக்காவின் 47-வது அதிபராக வெள்ளை மாளிகையில் உள்ள கேபிட்டால் கட்டிடத்தின் உள்ளரங்கில் நடந்த நிகழ்ச்சியில், இந்திய நேரப்படி நேற்றிரவு 10.30 மணியளவில் டொனால்டு டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். ஜனாதிபதி பதவியேற்பு விழாவின் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளுக்காக ‘டிரம்ப் பதவியேற்பு குழு’ மூலம் நிதி திரட்டப்பட்டது. இந்த குழுவிற்கு பல்வேறு உலக பணக்காரர்கள் கோடிக்கணக்கான டாலர்களை நன்கொடையாக வழங்கினர். புதிய அதிபர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வை தவிர, மற்ற அனைத்து அதிகாரப்பூர்வ நிகழ்வுகளுக்கும் டிரம்ப் பதவியேற்பு குழுவே நிதியை வழங்கியுள்ளது.
மேலும் இந்த பதவியேற்பு நிகழ்ச்சியை திறந்த வெளியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கடும் குளிர் காரணமாக உள்ளரங்கில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு உலக பணக்காரர்கள் பங்கேற்றனர். குறிப்பாக அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், ஆல்பாபெட் நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை, டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ. எலான் மஸ்க், மெட்டா நிறுவனத்தின் சி.இ.ஓ. மார்க் ஜுக்கர்பெர்க் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த விழாவில் டிரம்ப் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களோடு, பெரும் தொழிலதிபர்கள், உலக பணக்காரர்கள் ஆகியோர் அதிபர் டிரம்ப்பின் குடும்பத்தினர் அருகே அமர்ந்திருந்தனர்.
இது குறித்து ஜனநாயக கட்சியை சேர்ந்த செனட் உறுப்பினர் எலிசபெத் வாரன் தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில்,
“டிரம்ப் பதவியேற்பு விழாவில் அவரது சொந்த அமைச்சரவை உறுப்பினர்களை விட பெரும் பணக்காரர்களுக்கு சிறந்த இருக்கைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதல் இருந்தே அனைத்தையும் புரிந்து கொள்ளலாம்” என்று விமர்சித்துள்ளார்.