விடுதலைப் புலிகளுடன் சமாதான பேச்சுக்களை ஆரம்பிக்கவேண்டும் என்று 1994 ல் சந்திரிக்கா அரசுக்கு அழுத்தம் கொடுத்தவர்களில் முக்கியமான ஒருவர்.
– ஐங்கரன் விக்கினேஸ்வரா- Australia
(இறுதிவரை மிகுந்த பரபரப்பான சர்ச்சைக்குரிய ஊடகவியலாளராகத் திகழ்ந்த விக்டர் ஐவன், தமிழ் பேசும் மக்களின் தேசிய சுய நிரணய உரிமைப் போராட்டத்தை அங்கீகாரம் செய்யாவிடினும், தனது இனத்தின், ஆளும் அரசுகளின் கொடுஞ் செயல்களை எதிர்த்து குரல் கொடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது)
தற்போது ஆளும் தேசிய மக்கள் சக்தியின் முன்னைய ஜேவிபியின் ஆரம்பகால மிக முக்கியஸ்தரான விக்டர் ஐவன் (பொடி அத்துல – Victor Ivan) கண்டுகொள்ளப்படாத பேனாப் போராளியாக மரணித்துள்ளார்.
1971 ஆண்டு ஜேவிபியின் நாடுதழுவிய கிளர்ச்சியின் போது கொழும்பு மாவட்டத்துக்கான கிளர்ச்சிக்குழுவின் பொறுப்பாளராக செயற்பட்டவர் விக்டர். அவர் பிற்காலத்தில் ஜேவிபியுடன் கருத்து வேறுபாடு காரணமாக அதிலிருந்து வெளியேறி சுயாதீன பத்திரிகையாளராக செயற்படத் தொடங்கினார்.
“ராவய” என்ற சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியராக அதன் தொடக்க காலத்திருந்து நீண்ட காலம் பணியாற்றியவர். நாட்டில் நடக்கும் ஊழல்களையும் தவறுகளையும் அம்பலப்படுத்த உறுதிபூண்ட சர்ச்சைமிகு பத்திரிகையாக ராவயாவை வளர்த்தெடுத்தார்.
ஜேவிபியின் மூத்த உறுப்பினர்:
இறக்கும் போது அவருக்கு வயது 75. முதலாவது 1971 கிளர்ச்சியின் போது ஜேவிபியின் மூத்த உறுப்பினராக இருந்த அவர், பொடி அத்துல என்று அழைக்கப்பட்டிருந்தார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பத்தி, செய்தித்தாள் எழுத்தாளரும், ராவயவின் ஆசிரியர் விக்டர் ஐவன் கராபிட்டிய மருத்துவமனையில் 19.01.2025இல் காலமானார்.
சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் ஆட்சியில் இருந்த அரசுகளுடன் எப்போதும் சர்ச்சைக்குரிய பத்திரிகையாளராக விளங்கினார்.
தற்போது ஆளும் கட்சியில் முன்பு முக்கிய பொறுப்பில் இருந்தவர் இந்த விக்டர் ஐவன். ஆயினும் கடந்த ஆண்டு அவரது பத்திரிகையான ராவய நிறுவகத்தை இவரால் விற்பனை செய்யவோ, இடமாற்றம் செய்யவோ, வாடகை அல்லது குத்தகைக்கு விடவோ, இடிக்கவோ, அதன் வழியாக இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை அகற்றவோ, செய்தித்தாள் வெளியிடவோ கூடாது என கட்டாய தடை அறிவிப்புடன் கூடிய பல தடை உத்தரவுகளை விக்டர் இவான் எதிர்கொண்டு நீதிமன்றத்தால் எச்சரிக்கப்பட்டார்.
ராவய பத்திரிகையின் ஆசிரியராக கடமையாற்றிய விக்டர் ஐவன்
1949 ஜூன் 26ஆம் திகதி பிறந்தவர். கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார். பத்திரிகை மற்றும் ஊடக சுதந்திரத்திற்கான அவரது அர்ப்பணிப்பு அவருக்கு பரவலான மரியாதையைப் பெற்றுத் தந்தது.
“ராவய” பத்திரிகை தொடங்கப்பட்டதிலிருந்து தொடர்ச்சியாக 25 ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணியாற்றினார். விக்டர் ஒரு புலனாய்வு பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர், கோட்பாட்டாளர், சமூக ஆர்வலர் மற்றும் பல புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
அச்சமற்ற செய்தியாளர்:
1971 இளைஞர் கிளர்ச்சி தொடர்பான பிரதான நீதிமன்ற வழக்கில் அவர் 7ஆவது குற்றவாளியாக இருந்தார். சந்தேகத்துக்குரிய அனைத்து பிரதிவாதிகளிலும் மிகவும் வண்ணமயமான நபர் என்று நீதிபதிகள் குழு அவரை விவரித்தது. விசாரணையின் முடிவில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
சிறைவாசத்தின்போது அவர் ஜே.வி.பி.யின் கோட்பாட்டையும் மார்க்ஸியத்தின் கோட்பாட்டையும் கைவிட்டார். வன்முறைக் கோட்பாட்டை நிராகரித்த அவர், மகாத்மா காந்தி விளக்கிய அகிம்சை தத்துவத்தை ஏற்றுக்கொண்டு அதனை தீவிரமாகப் பின்பற்றுபவராக மாறினார்.
சிறிலங்காவில் இனவாதம் தலைதூக்கி, சிங்கள அரசுகளால் வடகிழக்கில் தமிழர்கள் மீதான வன்முறைகள் வெடித்ததால் நாடு கொந்தளிப்பில் இருந்த 1986ஆம் ஆண்டு விக்டர் ஐவன் பத்திரிகைத் துறையில் நுழைந்தார்.
அவர் தொடங்கிய ‘ராவய’ என்ற மாத இதழ் விரைவில் வாசகர்களிடையே பிரபலமடைந்து, அந்த நேரத்தில் அதிக தேவை கொண்ட பத்திரிகையாக மாறியது. இந்த பத்திரிகை ஊடாக அவர் பல்வேறு உண்மைகளை வெளிக்கொணர்ந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அச்சமற்ற செய்தி அறிக்கையிடல் மற்றும் கூர்மையான வர்ணனைக்கு பெயர் பெற்ற இவர், இலங்கை ஊடகங்களில் ஒரு முக்கிய நபராக தனது இடத்தை உறுதிப்படுத்தியிருக்கிறார்.
புலிகளுடன் சமாதான பேச்சின் முன்னோடி:
மூத்த பத்திரிகையாளர் விக்டர் இவான் 1993 ஆம் ஆண்டு யாழ்குடா முழுமையாக புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சமயம் யாழ்ப்பாணத்திற்கு துணிந்து பலதடவைகள் விஜயம் செய்தவர்.
அத்துடன் 1994 – சந்திரிக்கா குமாரணதுங்க ஆட்சிபீடம் ஏறுவதற்கு மிகமுக்கியமான மூளையாக, சூத்திர தாரியாக செயற்பட்ட ஊடகவியலாளர் இவர் விளங்கினார்.
புலிகளுடன் சமாதான பேச்சுக்களை ஆரம்பிக்கவேண்டும் என்று சந்திரிக்கா அரசுக்கு அழுத்தம் கொடுத்தவர்களில் இவரும் முக்கியமான ஒருவர்.
ஆரம்பத்தில் சந்திரிக்கா அரசை அனுசரித்துப் போனாலும், பின்னர் அவர் கடுமையாக விமர்சித்தார்.
அக்காலத்தில் அவர் எழுதிய பிரபலமான புத்தகங்களில் ஒன்று “The Queen of Deceit’ என்பதாகும். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்கவினது ஆட்சிக் காலம் குறித்த சர்ச்சை தரும் புத்தகமாக வெளியாகியது.
சிங்கள ஊடகங்களில் இறுதிவரை மிகுந்த பரபரப்பான சர்ச்சைக்குரிய ஊடகவியலாளராகத் திகழ்ந்தவர். இலங்கைத் தீவில் நீண்ட காலமாக ஒடுக்கப்பட்டு வரும் தமிழ் பேசும் மக்களின் தேசிய சுய நிரணய உரிமைப் போராட்டத்தை அவர் அங்கீகாரம் செய்யவில்லை.
ஆயினும் ஆளும் அரசுகளுடன் சமரசமற்று முரண்பட்டு போராடினார். தனது இனத்தின் கொடுஞ் செயல்களை எதிர்த்து குரல் கொடுத்து வந்தார் என்பதும் வரலாற்று உண்மையாகும்.
சிங்கள பத்திரிகை உலகின் இன்னோர் ஜம்பவான் விடைபெற்று உள்ளார். சக மொழி பத்திரிகையாளர்களை நேசத்துடன் பழகிய, சமரசமற்ற பேனாப் போராளியான ‘ராவய’ புகழ் விக்டர் ஐவனுக்கு எம் ஆத்மார்த்த அஞ்சலிகள் உரித்தாகட்டும்.