“தற்போது கட்சி ஆரம்பிப்பவர்கள் உடனேயே ஆட்சி அதிகாரத்தில் அமர்வதாக பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாதக உள்ளிட்ட மாற்றுக் கட்சியினை சேர்ந்த 3000-த்திற்கும் மேற்பட்டோர் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். கட்சியில் இணைந்தவர்களுக்கு திமுக. துண்டை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
“பிற கட்சி பொறுப்பில் பணியாற்றிய நீங்கள் தலைமை முறையாக இல்லை என்பதால் தி.மு.க.வில் இணைந்துள்ளீர்கள். பிற கட்சியிலிருந்த நீங்கள் தலைமை சரியில்லை என்பதை உணர்ந்து வர வேண்டிய கட்சிக்கு வந்து சேர்ந்துள்ளீர்கள். திமுக நேற்று முளைத்த காளான் அல்ல. 1949-ல் அண்ணா வடசென்னையில் கொட்டும் மழையில் தொடங்கிய இயக்கம். 1949-ல் திமுக தொடங்கப்பட்ட நிலையில் 1957-ல் தேர்தலை சந்தித்தது. 1957-ல் 15 இடங்களில் தான் வெற்றி பெற்றோம். 1962-ல் 50-க்கும் மேற்பட்ட இடத்தில் வென்று எதிர்க்கட்சியானது திமுக. ஆட்சியில் அமர்வதற்கு அல்ல; ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தொண்டாற்ற தான் திமுக தொடங்கப்பட்டது. நாம் தமிழர் கட்சி என்ற பெயரை சொல்லவே நாங்கள் தயாராக இல்லை. தமிழருக்காக பாடுபடும் கட்சி என்றால் அக்கட்சியின் பெயரை உச்சரிக்கலாம். தற்போது கட்சி ஆரம்பிப்பவர்கள் உடனேயே ஆட்சி அதிகாரத்தில் அமர்வதாக பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். வேஷம் கட்டிக்கொண்டு திரிபவர்களை அடையாளப்படுத்துவதற்கு நான் விரும்பவில்லை. திமுக மாடல் என்று சொன்னாலே சிலருக்கு ஆவேசம் வருகிறது. மதத்தை மையமாக வைத்து பேசும் ஆளுநரால் திமுக மேலும் வளருகிறது. திமுகவுக்கு ஆதரவும் அதிகரிக்கிறது. தமிழக ஆளுநரை தயவு செய்து மாற்றி விடாதீர்கள் என்று பிரதமர், உள்துறை அமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறேன். 7-வது முறையாக நிச்சயமாக தி.மு.க. தான் ஆட்சி அமைக்கும் என உறுதியாக சொல்கிறேன்” என தெரிவித்தார்.