இசையமைப்பாளர் டி.இமான் தனது பிறந்த நாளன்று தன் முழு உடல் உறுப்புகளையும் தானம் செய்துள்ளார். விஜய் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான ‘தமிழன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். அதன்பின்னர் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம், கார்த்தி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’ படத்திற்காக டி.இமான் தேசிய விருது பெற்றார். கிரி, மைனா, கும்கி, கயல், பாண்டியநாடு, ஜீவா, ஜில்லா, விஸ்வாஸம், மனம்கொத்திப் பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா, நம்ம வீட்டுப்பிள்ளை, மருது, வெள்ளக்கார துரை, அண்ணாத்த எனப் பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து பல ஹிட் பாடல்களைக் கொடுத்தார், டி.இமான். இசையமைப்பாளர் இமான், இப்போது சமூக சேவகராகவும் நற்பணிகள் பலவற்றை செய்து வருகிறார். இப்போது பிரபுசாலமன், சுசீந்திரன் உள்பட பலரின் படங்களுக்கு இசைமைத்தும் வருகிறார். சமீபத்தில் அவரது இசையில் வெளியான ‘பேபி & பேபி’ பட பாடல்களும் வரவேற்பை பெற்று வருகிறது.
நேற்று இமான் பிறந்த நாளைக் கொண்டாடினார். அப்போது அவர் தன் உடலை சென்னை அரசு மருத்துவமனைக்கு தானமாக அளித்துள்ளார். இதனை அவர் சமூக ஊடகங்கள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தி உள்ளார். ‘நாம இறந்த பிறகும் இந்த உடல் பயனுள்ளதாக இருக்கும். ரெண்டு நாளைக்கு முன்னாடி, உடல் தானம் செய்திருந்தாலும், பிறந்த நாளன்றுதான் அறிவிக்க நினைத்தேன். அதன்படி இன்று அறிவித்திருக்கிறேன். என்னோட கண்கள், இதயம், நுரையீரல் என அனைத்து உறுப்புகளை தானம் செய்து முறைப்படி தானம் செய்ததற்கான டோனர் அட்டையையும் வாங்கிட்டேன். நாம ஆரோக்கியமாக இருக்கும் போதே உடல் உறுப்புகளை தானம் செய்திடனும் விரும்புறேன். சில பேர் கடைசி காலத்தில் உடல் தானம் செய்யணும்னு விரும்புவாங்க. இப்ப என் மனைவியும் உடல் உறுப்பு தானம் செய்திருக்காங்க. நாம இறந்து ஒரு மணி நேரத்துக்குள்ளாக மருத்துவமனைக்கு தகவல் சொன்னால்தான் கண்கள், நுரையீரல், இதயம் போன்ற உறுப்புகள் செயலிழக்காமல் இருக்கும் போதே, எடுத்துக்க முடியும்’ என்று கூறியுள்ளார் இமான்.