இஸ்ரேல், ஹமாஸ் ஆயுதக்குழு இடையே ஓராண்டுக்கு மேல் நீடித்து வந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இப்போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். இஸ்ரேல் மீதும் அவ்வப்போது டிரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தினர். மேலும், ஹமாசுக்கு ஆதரவு அளிக்கிறோம் என்ற பெயரில் செங்கடல் பகுதியில் செல்லும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். சரக்கு கப்பல்களில் பயணிக்கும் மாலுமிகளையும் கைது செய்துள்ளனர். ஏமனில் தங்கள் கட்டுப்பாடில் உள்ள பகுதியில் செயல்பட்டு வந்த ஐ.நா. அமைப்பின் ஊழியர்களையும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைது செய்துள்ளனர். தன்னார்வு தொண்டு நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்களையும் கைது செய்துள்ளனர். இந்நிலையில், தங்கள் பிடியில் உள்ள ஐ.நா. ஊழியர்கள், தன்னார்வு தொண்டு நிறுவனங்களின் ஊழியர்களில் 153 பேரை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் விடுதலை செய்துள்ளனர்.