தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான திரிஷாவும், மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டோவினோ தாமஸும் இணைந்து நடித்துள்ள படம் ‘ஐடென்டிட்டி’. இந்த படத்தில் வினய் ராய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தினை அகில் பால், அனஸ்கான் இயக்கியுள்ளனர். செஞ்சுரி பிலிம்ஸ் மற்றும் ராகம் மூவிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார். கடந்த 2-ந் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மருத்துவத்துறையில் நடக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து ஆக்சன் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. ஒரு குற்றத்தை நேரில் பார்க்கும் திரிஷா குற்றவாளியை கண்டுபிடிக்க காவல்துறைக்கு உதவுகிறார். அந்த குழுவில் படம் வரையும் ஆளாக இருக்கிறார் டோவினோ தாமஸ். குற்றவாளி யார், கதையின் பின்னணி என்ன என்பதை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் வருகிற 31-ந் தேதி ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.