மராட்டிய மாநிலம் மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 6 அமெரிக்கர்கள் உள்பட 166 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த கனடா தொழிலதிபர் தஹாவூர் ராணா என்பவர் மூளையாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது 63 வயதாகும் தஹாவூர் ராணாவை கடந்த 2009-ம் ஆண்டு எப்.பி.ஐ. அதிகாரிகள் சிகாகோவில் கைது செய்தனர். தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தஹாவூர் ராணாவை நாடு கடத்தும்படி அமெரிக்காவிடம் இந்திய அரசு கோரிக்கை விடுத்தது. இதற்கிடையில், தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்த தடை விதிக்கக் கோரி, கலிபோர்னியா மற்றும் சான் பிரான்சிஸ்கோ நீதிமன்றங்களில் தஹாவூர் ராணா தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் தஹாவூர் ராணா மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த அமெரிக்க உச்சநீதிமன்றம், தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.