தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்துள்ளார். மகிழ் திருமேனி இயக்கிய இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு பணிகளை ஓம் பிரகாஷ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை என்.பி. ஸ்ரீகாந்த் மேற்கொண்டுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் அடுத்த மாதம் 6-ம் தேதி வெளியாகவுள்ளது. விடாமுயற்சி படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து வெளியான சவதீகா மற்றும் பத்திக்கிச்சி ஆகிய இரண்டு பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
இந்நிலையில், துபாயில் நடிகர் அஜித்திடம் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ பாடலை அசத்தலாக பாடிய ரசிகரின் காணொளி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ரசிகர் அழகாக பாடுவதை புன்னகையுடன் வியந்து கேட்டு ரசித்த அஜித் அவரை பாராட்டினார். பின்னர் ரசிகரின் பெயரை கேட்க அவர் அஜித் என கூற, இருவரும் சிரித்தவாறு கட்டியணைத்தனர்.