ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போர் 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷிய ராணுவம் கைப்பற்றியது. அதே சமயம், மேற்கத்திய நாடுகளின் ராணுவ மற்றும் பொருளாதார உதவியுடன் உக்ரைன் ராணுவம் போரை எதிர்கொண்டு வருகிறது. மேலும் ரஷியாவால் கைப்பற்றப்பட்ட சில பகுதிகளையும் உக்ரைன் ராணுவம் மீட்டது. இந்த நிலையில், ரஷியாவின் தலைநகர் மாஸ்கோ உள்பட 13 பிராந்தியங்களை குறிவைத்து உக்ரைன் சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. குறிப்பாக மாஸ்கோவில் உள்ள ஒரு எண்ணெய் ஆலை மீது குண்டுகள் வீசப்பட்டன. இதில் அந்த எண்ணெய் ஆலை தீக்கிரையானது. எனினும் இந்த தாக்குதலில் உயிர் சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. இது நடப்பாண்டில் ரஷியா மீது உக்ரைன் நடத்திய மிகப்பெரிய தாக்குதல் என்று கூறப்படுகிறது. அதே சமயம், உக்ரைனின் 121 டிரோன்களை ரஷிய ராணுவம் இடைமறித்து அழித்ததாக ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.