இந்தியா-வங்காளதேச ராணுவத்தினர் எல்லையில் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.
நாட்டின் 76-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது . 76-வது குடியரசு தின விழாவையொட்டி டில்லியில் அதிபர் திரவுபதி முர்மு தேசிய கொடி ஏற்றினார். பின்னர் 21 பீரங்கி குண்டுகள் முழங்க தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிலையில், இந்தியா-வங்காளதேச எல்லையில் இருநாட்டு ராணுவங்களை சேர்ந்த அதிகாரிகள் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரி அருகே எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வங்காளதேச ராணுவத்தினருடன் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். குடியரசு தின விழாவை முன்னிட்டு வங்காளதேச ராணுவத்தினர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். இதே போல், டார்ஜீலிங்கில் உள்ள பனிடங்கி பகுதியில், இந்தியா-நேபாள எல்லை அருகே மத்திய காவல்படையின் எஸ்.எஸ்.பி. படையை சேர்ந்த அதிகாரிகள், நேபாள காவல்துறையுடன் இனிப்புகளை பரிமாறி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.