76வது குடியரசு தினத்தை ஒட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருதுகளை வழங்கினார்.
நாட்டின் 76-வது குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழக அரசு சார்பில் மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா நடைபெற்றது. முதலில் சென்னை காமராஜர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து ஆளுநர் ஆர்.என். ரவி மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து குடியரசு தின விழாவில் பங்கேற்க வந்த ஆளுநர் ஆர்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து அளித்து வரவேற்றார். இதையடுத்து தேசிய கீதம் இசைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் தேசிய கொடிக்கு மலர் தூவப்பட்டது.
இந்த விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். தொடர்ந்து முன்னாள் ராணுவ வீரர்களின் படைப்பிரிவு, தமிழக காவல்துறை, சிஆர்பிஎஃப் படைப் பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து தமிழக வனத்துறை, குதிரைப்படை, சிறைப்படை பிரிவு மற்றும் நீலகிரி படைப்பிரிவினர் கம்பீரமாக அணிவகுப்பு நடத்தினர். தீயணைப்பு மீட்புப்படை பிரிவு, ஊர்க்காவல் படை, தேசிய மாணவர் படை, தேசிய பேரிடர் மீட்பு படையினர் கம்பீரமாக அணிவகுப்பு நடத்தினர். தொடர்ந்து நாட்டு நலப்பணிப்படை, சாலை பாதுகாப்புப்படை, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அணிவகுப்பு நடத்தினர். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 76வது குடியரசு தினத்தை ஒட்டி வீரதீர செயலுக்கான விருதுகளை வழங்கினார்.
அண்ணா பதக்கம் : வெற்றிவேல் (முன்னணி தீயணைப்பு வீரர் )
கோட்டை அமீர் நல்லிணக்கப் பதக்கம்: அமீர் அம்சா (இராமநாதபுரம்)
வேளாண்மை துறையின் சிறப்பு விருது: முருகவேல் (தேனி மாவட்டம்). நாராயணசாமி நெல் விருது பெறும் முருகவேலுக்கு ரூ.5 லட்சம் காசோலை, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
காந்தியடிகள் காவலர் பதக்கங்கள்:
மகாமார்க்ஸ் – காவல் நிலைய தலைமை காவலர் விழுப்புரம் சட்டம் மற்றும் ஒழுங்கு.
கார்த்திக் – தலைமை காவலர் (திருச்சி மாவட்டம்)
சிவா – இரண்டாம் நிலை காவலர் ஆயுதப்படை (சேலம் மாவட்டம்)
பூமாலை – இரண்டாம் நிலை காவலர் ஆயுதப்படை (சேலம் மாவட்டம்)
சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சரின் விருது :
சிறந்த காவல் நிலையத்துக்கான முதலமைச்சர் விருது மதுரை மாநகர காவல் நிலையத்துக்கு வழங்கப்பட்டது. திருப்பூர் மாநகர காவல் நிலையத்திற்கு 2-ம் பரிசு, திருவள்ளூர் மாவட்ட காவல் நிலையத்திற்கு 3-ம் பரிசும் வழங்கப்பட்டது.