நடராசா லோகதயாளன்.
இலங்கையின் தமிழ் அரசியல் களத்தில் நீண்ட கால அனுபவத்தை கொண்ட மாவை சேனாதிராஜா என அறிமுகம்கொண்ட சோமசுந்தரம் சேனாதிராஜாவின் இறுதி நிகழ்வுகள் 2ம் திகதி ஞாயிறு மாலை இடம்பெறவுள்ளது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் முன்னாள் தலைவரான மாவை சோ.சேனாதிராஜா, 1942 ஜனவரி 29, அன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காலமானார்.
83 வயதான இவாின் இழப்பு தமிழ் அரசியல் வரலாற்றில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதாக பதிவிடப்படுகின்றது.
தமிழர் உரிமைகளுக்காக தொடர்ந்து தனது வாழ்வை அர்ப்பணிக்கப்பனித்து விடுதலைப் பயணத்தில் பயணித்தார். 1942 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பிறந்த சோமசுந்தரம் சேனாதிராஜாவே உலகளவில் “மாவை” என்று அழைக்கப்பட்டார்.
காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரியில் கல்வி கற்ற இவா் . தனது வாழ்நாள் முழுவதும் தமிழர் உரிமைகளுக்காகப் போராடியவர், அனுபவம் வாய்ந்த மூத்த அரசியல்வாதி,
ஈழத் தமிழர்களின் போராட்டத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த தலைவர்களில் ஒருவர்.
மாவிட்டபுரத்தை சொந்த இடமாக்கொண்ட இவர், 1961 ஆம் ஆண்டு எஸ்.ஜே.வி. செல்வநாயகத்துடன் இணைந்து சத்தியாகிரகத்தில் தீவிரமாகப் பங்கேற்றார்.
தனது செயல்பாட்டிற்காக இலங்கை அரசால் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார், மொத்தம் ஏழு ஆண்டுகள் சிறையிடப்பட்டார்.
விடுதலை இயக்கத்தில் ஒரு இளம் ஆர்வலராக இருந்து இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் பின்னர் தலைவராகவும் பணியாற்றுவது வரை, அவரது பயணம் அர்ப்பணிப்புடன் இருந்தது.
2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் அதிகபட்சமாக 58,782 விருப்பு வாக்குகளுடன் இவா் பெற்ற வெற்றி ஒப்பிடமுடியாத அரசியல் வாழ்வில் ஈர்ப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
கடந்த 2001ம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற சக்தியை உருவாக்க இவாின் பங்கு காத்திரமாக அமைந்திருந்தது.
நல்லாட்சிக் காலத்தில் வலி வடக்கு மீள்குடியேற்றத்திற்காக அரும் பாடுபட்டு பல காணிகள் விடுவிப்பதற்காக கடுமையாக உழைத்தாா்.
இவரது மறைவு தமிழ் அரசியலில் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது.
இவரது இறுதிக் கிாியைகள் வரும் 2ம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 8.00 மணி தொடக்கம் 10.00 மணி வரை சமயச் சடங்குகள் நடைபெற்று 10 மணி தொடக்கம் மதியம் 1.00 மணி வரை அஞ்சலி நிகழ்வு நடைபெறும்.
பின்பு தகனக் கிாியைகளுக்காக உடல் கீாிமலை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
இவரது மறைவு தொடர்பில் கட்சியின் செயலாளரான ப.சத்தியலிங்கம் தெரிவிக்கையில்,
மாவை தமிழினத்தின் அரசியல் விடிவிற்காக இறுதிவரை போராடிய அரசியல் போராளி.
சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கையின் வரலாற்றில் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்காக இறுதிவரை போராடிய ஒரு உன்னதமான போராளி அமரர் மாவை சேனாதிராஜா என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சிரேஸ்ட தலைவரும், மூத்த அரசியல்வாதியும், முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராஜாவின்; மறைவையொட்டி கட்சியின் பொதுச்செயலாளரால் வெளியிடப்பட்டுள்ள இரங்கல் செய்தியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாவை அண்ணர் என்று அனைவராலும் வயதுவித்தியாசமின்றி அன்பாக அழைக்கப்பட்டவர் மாவை சோ.சேனாதிராஜா. யாழ்ப்பாண மண்ணின் புகழ்பூத்த மாவிட்டபுரத்தில் பிறந்த சோ.சேனாதிராஜாஅவர்கள் ஊரின் பெயருக்கு பெருமைசேர்த்தவராக மாவை சேனாதிராஜா என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். 1961ம் ஆண்டு; தமிழ் மக்களுக்கு எதிரான அரசின் அரசியல் அடக்குமுறைகளுக்கு எதிராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபகதலைவர் தந்தை செல்வா அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரக போராட்டத்தில் தனது 19வது வயதிலேயே இணைந்து போராடியதோடு அன்னாரது அரசியல் பயணம் ஆரம்பமாகியது. இறுதி மூச்சுவரை தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்காக ஐனநாயக ரீதியில் போராடியவர் மாவை சேனாதிராஜா.
1962ம் ஆண்டு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இளைஞர் அணியில் சேர்ந்து முழுநேரஅரசியல் பயணத்தை ஆரம்பித்த மாவை சேனாதிராஜா அவர்கள் 1966 முதல் 1969 வரையில் ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்தில் செயலாளராகவும் 1972ல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழ் இளைஞர் பேரவையின் செயலாளராகவும் துடிப்புடன் செயற்பட்டவர். 1989ல் முதன்முறையாக பாராளுமன்ற அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்து 2020 வரையில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காக பாராளுமன்றத்தில் ஐனநாயக வழியில் குரல் கொடுத்தவர். தனது அரசியல் பயணத்தில் பலதடவை சிறைவாசம் சென்றதுடன் தேர்தல் காலங்களில் அரசியல் எதிரிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த நிலையிலும் அரசியல் பணிகளை முன்னெடுத்த மாபெரும் தலைவர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் அ.அமிர்தலிங்கம் அவர்களின் மறைவுக்கு பின்னர் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்து கட்சியை வழிநடாத்தியவர். 2004 ம் ஆண்டிலிருந்து 2014ம் ஆண்டு வரையில் கட்சியின் செயலாளராக 10 வருடங்கள் பணியாற்றியதுடன், 2014ம் ஆண்டு வவுனியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் கட்சியின் தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் 2024ம் ஆண்டுவரையில் ஏறத்தாள 10 வருடங்கள் கட்சியின் தலைவராக வழிநடாத்தியவர்.
அன்னாரின் இழப்பு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு பாரிய இழப்பாகும். அன்னாரின் மறைவால் துயருறும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன் எடத் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் வடக்கு கிழக்கிற்கு வெளியில் வாழும் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் முற்போக்கு கூட்டணியின. தலைவரான மனோ கணேசன் தனது அஞ்சலியில்,
சிரேஷ்ட தமிழ் அரசியல்வாதி, இலங்கை தமிழரசு தலைவர், முன்னாள் யாழ் பாஉ என்ற தகைமைகளுக்கு அப்பால், அண்ணன் மாவை, ஒரு தமிழ் தேசிய அடையாளம் என்பது நிதர்சனம்.
இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா அவர்களின் மறைவு தொடர்பில் மனோ கணேசன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது;>
மிக நீண்ட காலமாக தமிழர் ஜனநாயக சாலையில் பயணித்த, மாவை சேனாதிராசா என்ற தமிழ் தேசிய வாகனம் நின்று விட்ட சம்பவம் இன்று நிகழ்ந்தே விட்டது. பல உணர்வு மிக்க தரிப்பிடங்களையும், கடவைகளையும், தமிழ் தேசிய அரசியல் தலைவர்களுடன் நான் கடந்து வந்துள்ளேன். இதிலேயே அண்ணன் மாவையுடன் மிக நீண்ட காலமாக நான் பயணித்தும் உள்ளேன்.
இன்றைய இந்த சோகத்தில், தமிழ் முற்போக்கு கூட்டணியாக நாம் பங்கு கொள்கிறோம். எங்கள் அனுதாபங்களை அவரை இழந்து வாடும் அவரது குடும்ப அங்கத்தவர்களுக்கும், அவரது கட்சிக்கும், மக்களுக்கும் தெரிவித்து கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.