2025-26-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 8வது முறையாக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், 2025-26ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்த 2025-26 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது. தொடக்கத்தில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் தரப் போவதாக நிதியமைச்சர் கூறினார். ஆனால், அவர் அறிவித்த அறிவிப்புகள் பீகார் மாநிலத்திற்கு ஜாக்பாட் அடித்த அளவிற்கு 5 திட்டங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கியிருக்கிறார். பீகாருக்கு அதிக நிதி ஒதுக்கிய நிர்மலா சீதாராமன் திருக்குறளை மட்டும் படித்து விட்டு தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களை புறக்கணித்திருக்கிறார். விவசாயிகளின் கோரிக்கைகளான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப் பாதுகாப்பு, கடன் நிவாரணம் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சீர்திருத்தம் போன்றவற்றைக் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசு 2014 முதல் 2024 வரை ரூபாய் 25 லட்சம் கோடி வாராக் கடனை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தள்ளுபடி செய்திருக்கிறது. பொதுத்துறை வங்கிகளில் மட்டும் ரூபாய் 14.56 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால், விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய எந்த அறிவிப்பும் இல்லை. இது ஒரு விவசாயிகளின் விரோத பட்ஜெட் ஆகும். விவசாயத்திற்கு அடுத்தபடியாக வேலை வாய்ப்பை வழங்குகிற சிறு, குறு தொழில்களுக்கு பெரிய அளவில் சலுகைகள் வழங்கப்படவில்லை. அனைத்து மாநிலங்களையும் சமமாக கருதாமல் அப்பட்டமான பாரபட்சத்தோடு நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
உலகத்திலேயே வேகமாக வளர்கிற பொருளாதார நாடு இந்தியா என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகிறார். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் சராசரி வளர்ச்சி விகிதம் 6 சதவிகிதமாகத் தான் இருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பற்றி பேசுகிற நிர்மலா சீதாராமன், சராசரி தனிநபர் வருமானம் ரூபாய் 2 லட்சத்து 15 ஆயிரமாக இருப்பதை குறிப்பிட மறுக்கிறார். இந்தியாவில் மொத்தம் வருமான வரி செலுத்துபவர்கள் 8 கோடி பேர். மொத்த மக்கள் தொகையில் இவர்கள் 7 சதவிகிதமாக உள்ளனர். அதில், 5 கோடி பேர் வருமான வரி கணக்கை சமர்ப்பித்து வரி செலுத்தாதவர்கள். மீதமுள்ள 3 கோடி பேர் தான் வருமான வரி செலுத்துபவர்கள். நிர்மலா சீதாராமன் அறிவிப்பால் 140 கோடி பேரில் 2 சதவிகித பேருக்கு தான் இந்த வரிவிலக்கு பொருந்தும். மீதமுள்ள 138 கோடி மக்களுக்கு என்ன சலுகை வழங்கினார் என்பதை நிதியமைச்சர் விளக்க வேண்டும்.
ஆக, ஒன்றிய பா.ஜ.க. அரசு என்பது ஏழை, எளிய அடித்தட்டு மக்களுக்கான அரசு அல்ல. மாறாக, உயர் வருமானம் பெறுகிறவர்களுக்கு ஆதரவாகத் தான் இந்த வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். எனவே, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கை வளர்ச்சியை அதிகரித்து, வேலை வாய்ப்பை பெருக்கி, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துகிற நோக்கம் கொண்டதாக இல்லை. இந்த நிதிநிலை அறிக்கை ஒன்றிய அரசுக்கானதாக இல்லாமல் பீகார் மாநிலத்திற்காக மட்டுமே இருப்பதைப் போல் அமைந்திருக்கிறது. இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானதாகும். மொத்தத்தில் இந்த நிதிநிலை அறிக்கை ஒரு கானல் நீராகவே அமைந்துள்ளது.