சித்தி தொடரில் அறிமுகமான டேனியல் பாலாஜி சுந்தர் கே விஜயன் இயக்கத்தில் உருவான ‘அலைகள்’ என்ற படத்தில் நடிகரானார். இந்த படத்தில் தான் அவருக்கு டேனியல் பாலாஜி என்ற பெயர் வைக்கப்பட்டது. அதன் பின்னர் ‘ஏப்ரல் மாதத்தில்’ ‘காதல் கொண்டேன்’ போன்ற படங்களில் நடித்த டேனியல் பாலாஜி சூர்யாவுடன் ‘காக்க காக்க’ படத்திலும் கமலஹாசன் உடன் ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் நடித்திருந்தார். தனுஷ் மற்றும் வெற்றிமாறன் ஆகிய இருவரது நெருங்கிய நண்பரான டேனியல் பாலாஜி அவர்களுடன் ‘பொல்லாதவன்’ ‘வடசென்னை’ போன்ற படங்களில் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி விஜய் உடன் ‘பைரவா’ மற்றும் ‘பிகில்’ படத்தில் நடித்த டேனியல் பாலாஜி அஜித்துடன் ‘என்னை அறிந்தால்’ படத்திலும் நடித்துள்ளார்.
பிரசாத் பிரபாகர் இயக்கத்தில் உருவாகியுள்ள டேனியல் பாலாஜி படத்துக்கு “ஆர்.பி.எம்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தில் டேனியல் பாலாஜி, கோவை சரளா, ஒய்.ஜி.மகேந்திரன், இளவரசு, தேவதர்ஷினி. சுனில், சுகதா, ஈஸ்வர் கிருஷ்ணா, தயாபிரசாத் உள்பட பலர் நடித்துள்ளனர்.ஜெ.செபாஸ்டியன் ரோஸாரியோ இசை அமைத்திருக்கிறார். தாமரை, மோகன் ராஜா ஆகியோர் பாடல்களை எழுத சித்ஸ்ரீராம் பாடி இருக்கிறார். மேலும் படத்தின் தயாரிப்பாளரான கல்பனா ராவேந்தர், ‘புரோக்கன் ஆரோ’ என்ற ஆங்கில பாடலுக்கு முதல் முறையாக இசையமைத்து பாடல் எழுதி பாடி இருக்கிறார். கிரைம், சஸ்பென்ஸ், திரில்லர் கதைகளத்தில் படத்தை சோல்டன் ரீல் இண்டர்நேஷனல் புரொடக்சன் நிறுவனம் தயாரித்துள்ளது. பிரசாத் பிரபாகர் இணை தயாரிப்பாளராக இருக்கிறார். படம் பற்றி இயக்குநர் பிரசாத் பிரபாகர் பேசுகையில், நடிகர் டேனியல் பாலாஜி நடித்த கடைசி படம் இது. படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. விரைவில் படத்தின் முன்னோட்டம் வெளியிடப்படுகிறது. படத்தின் மோஷன் பதாகையை விஜய் சேதுபதி அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.