அமெரிக்காவின் ஹூஸ்டன் விமான நிலையத்தில் இருந்து நியூயார்க்குக்கு விமானம் ஒன்று புறப்பட்டது. அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானத்தில் 5 பணியாளர்கள் உள்பட 109 பேர் பயணித்தனர். ஹூஸ்டன் விமான நிலைய ஓடுதளத்தில் இருந்து மேலே எழும்பியபோது அந்த விமானத்தின் ஒரு இறக்கை திடீரென தீப்பிடித்தது. இதனை பார்த்த பயணிகள் பயத்தில் கத்தி கூச்சலிட்டனர். இதனையடுத்து அந்த விமானம் ஹூஸ்டன் விமான நிலையத்தில் உடனடியாக தரையிறக்கப்பட்டது. பின்னர் அங்கு தயாராக இருந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். மற்றொருபுறம் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது. எனினும் விமானியின் சாமர்த்தியத்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
