யாழ்ப்பாணம் மாவட்டச் செயலருக்குக் கடிதம்.
ந.லோகதயாளன்
தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக் காணி உட்பட 14 ஏக்கர் காணி முழுவதும் திஸ்ஸ விகாரைக்கே சொந்தமானது. அதனை ஒருபோதும் எவருக்கும் கையளிக்க முடியாது. அதற்கான எந்தவொரு நடவடிக்கைக்கும் அனுமதி இல்லை என்று அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலருக்கு எழுத்தில் அறிவித்துள்ளது.
அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனத்தால் டிசெம்பர் மாதம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலருக்கு கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்திலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் 13ஆம் திகதி நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் விகாரையின் நிலத்தைப் பொதுமக்களுக்கு வழங்குவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது என்று அறியமுடிகின்றது. அந்தச் சந்தர்ப்பத்தில் விகாரைக்குப் பொறுப்பான தேரர் மற்றும் விகாரையின் நிர்வாக சபையினருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. திஸ்ஸ விகாரை நிலத்தின் எந்தவொரு பகுதியும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணக்கப்பாட்டுக்கு அமைவாக பொதுமக்களுக்கு வழங்குவதற்குச் சந்தர்ப்பம் இல்லை.
விகாரை அமைக்கப்பட்டுள்ள 7 ஏக்கர் 3 றூட் 9.97 பேர்ச் உட்பட 14 ஏக்கர் 5097 பேர்ச் காணி, விகாரைக்கே சொந்தமானது. அந்தக் காணியை விகாரையிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக விகாரைக்குச் சொந்தமான நிலத்தின் எந்தவொரு பகுதியையும் பொதுமக்களுக்கு வழங்குவதற்கு சந்தர்ப்பம் இல்லை.
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் நடைமுறையில் உள்ள சட்டங்களுக்குக் கட்டுப்பட்டவை. அரசியலமைப்பின் 9ஆவது பிரிவின்படி பௌத்தத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதாலும், பௌத்த மதத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளதாலும் காணியை விகாரைக்குக் கையளிக்க எந்தத் தடையும் இல்லை.
விகாரைக்குரிய காணியில் பௌத்த சமயத்தின் முன்னேற்றத்துக்காக சைத்யம், புத்த மெதுரா, போதி, ஆவாச மனை, அன்னதான மடம் மற்றும் மடாலயம் ஆகியவற்றைக் கொண்ட பூங்கா தற்போது அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.
யாழ்ப்பாண மாவட்டத்துக்குப் புனித யாத்திரை செல்லும் பௌத்த பத்தர்களுக்காக ஓய்வு மண்டப வசதிகள், அன்னதான மண்டபம், தியான மண்டபங்கள், தர்ம பாடசாலை கட்டடங்கள் என்பன நிர்மாணிக்கப்படுவதும் அவசியம். நில அளவைத் திணைக்களத்தால் அடையாளம் காணப்பட்டுள்ள 14 ஏக்கர் 5097 பேர்ச் காணியை மீள விகாரையிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – என கடிதத்தில் உள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் கடந்த 31ஆம் திகதி நடைபெற்றபோது யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தையிட்டியில் பொதுமக்களின் காணிகளில் எவ்வித அனுமதியும் பெறாது அமைக்கப்பட்டிருக்கும் விகாரை தொடர்பாகப் பிரஸ்தாபித்தார். யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தீர்மானம், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தீர்மானம் என்பற்றை மீறி எந்தவித அனுமதியும் பெறாது பொதுமக்களின் காணிகளில் அமைக்கப்பட்டிருக்கும் விகாரை தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவந்திருந்தார்.
கூட்டத்தில் கருத்துத் தெரிவித்திருந்த வடக்கு மாகாண ஆளுநர், விகாரை அமைக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்களுக்கு மாற்றுக் காணிகள் வழங்குவது தொடர்பாக கலந்துரையாடப்படுகின்றது என்றும், மாற்றுக்காணிகளைப் பெற்றுக்கொள்ள காணிகளின் உரிமையாளர்கள் உடன்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்திருந்தார்.
காணிகளின் உரிமையாளர்கள் மாற்றுக் காணிகளைப் பெற்றுக்கொள்ள உடன்படவில்லை என்று அந்தச் சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியிருந்தார். ஆயினும் இந்த அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இந்தக் கடிதம் தொடர்பாக எந்தக் கருத்தையும் மாவட்ட அரச அதிபரோ, ஆளுநராலோ முன்வைக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.