அமெரிக்காவில் உள்ள மேற்கு அலாஸ்காவின் உனலக்லீட்டில் இருந்து, உள்ளூர் நேரப்படி நேற்று மதியம் செஸ்னா 208பி கிரான்ட் காராவன் எனும் சிறிய ரக விமானம் 10 பேருடன் புறப்பட்டு சென்றது. புறப்பட்ட 39 நிமிடங்களிலேயே ரேடாரில் இருந்து தொடர்பை இழந்து மாயமானது. இதைத் தொடர்ந்து, மாயமான விமானத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் அலஸ்காவின் பாதுகாப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளை மலை பகுதியில் விமானம் ஏதேனும் விபத்துக்குள்ளானதா? என்ற சந்தேகத்தின் பேரில் உள்ளூர் மக்களின் உதவியுடன் தேடும் பணியும் நடந்து வருகிறது. அதேபோல, கடல் பகுதிகளிலும் விமானத்தை தேடி வருகின்றனர். மோசமான வானிலை காரணமாக, விமானத்தை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. காணாமல் போன விமானத்தில் 9 பயணிகள் மற்றும் 1 விமானி உட்பட 10 பேர் பயணம் செய்ததாக விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
