ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நீடிக்கிறது. அந்த நாட்டுடனான அணு சக்தி ஒப்பந்தத்தில் வெளியேறுவதாக கடந்த 2018-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்தார். இதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் மேலும் வலுத்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாகி இருக்கும் டிரம்ப், அணு ஆயுத விவகாரத்தில் ஈரான் மீது அதிகபட்ச அழுத்தம் கொடுப்பதற்கான நிர்வாக உத்தரவில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கையெழுத்திட்டார். எனினும் ஈரான் மீது கடுமையாக இருக்க விரும்பவில்லை என்றும் அந்த நாட்டுடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்த முயற்சிப்பேன் என்றும் டிரம்ப் தெரிவித்தார். இந்த நிலையில் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் கடற்படை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஈரானின் மூத்த மத தலைவர் அயதுல்லா அலி காமெனி, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என தெரிவித்தார். இதுப்பற்றி அவர் கூறுகையில், “அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை புத்திசாலித்தனமானதாக, கவுரவமானதாக இருக்காது. எனவே அத்தகைய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது” என தெரிவித்தார்.
