நாலு சுவற்றில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்யாமல் வீதிக்கு வந்து மக்களை சந்திக்க வேண்டுமென தவெக தலைவர் விஜய்க்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவுரை கூறியுள்ளார்.
மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “விஜய் எங்கள் வீட்டு பையன். அவரை பட்டிதொட்டியெல்லாம் கொண்டு சேர்த்தவர் விஜயகாந்த். அரசியல் வேறு சினிமா வேறு என்பதை விஜய் புரிந்து கொள்ள வேண்டும். நாலுக்கு நாலு சுவற்றில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்யாமல் வீதிக்கு வந்து முதலில் மக்களையும் பத்திரிகையாளர்களையும் விஜய் முதலில் சந்திக்க வேண்டும். கல்வி மட்டுமல்ல விவசாயம் தொடர்பாக டெல்டா மாவட்ட மக்களுக்கு முதலமைச்சர் என்ன நிவாரணம் வழங்கி இருக்கிறார். நானும் டெல்டாக்காரன் தான் என்று பேசுகிறார். பாதிக்கப்பட்ட விவசாயிகளை முதலில் அவர் சந்தித்து எந்த ஒரு நிவாரணமும் கொடுக்கவில்லை. பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும். ஆளுங்கட்சியும், ஆளுநரும் முறைத்து கொண்டிருப்பதால் மக்களுக்கு தான் பிரச்னை. திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. கனிம வளம் கொள்ளை, டாஸ்மாக், கஞ்சா, பாலியல் துன்புறுத்தல், ஊழல், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் திமுக மீது மக்கள் கோபத்தில் இருக்கின்றனர். 2026 தேர்தலில் 234 தொகுதிகளும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும் ’’ இவ்வாறு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.