அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், பதவியேற்ற நாள் முதலே அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக அவரது வரி விதிப்பு நடவடிக்கைகள் உலக அரங்கில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதமும், சீனா பொருள்களுக்கு 10 சதவீதமும் வரி விதிப்பு பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று டிரம்ப் அறிவித்திருந்தார். மெக்சிகோவும் கனடாவும் புலம்பெயர்வு மற்றும் பெண்டனில் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை இந்த நடவடிக்கைத் தொடரும் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால் கனடாவும், மெக்சிகோவும் கடைசி நேரத்தில் டிரம்ப் கூறிய நடவடிக்கைகளுக்கு உத்தரவாதம் அளித்த நிலையில் வரி விதிப்பு ஒருமாத காலம் நிறுத்தி வைக்கப்பட்டது. டிரம்பின் புதிய வரி விதிப்பு நடவடிக்கைகளால் பல்வேறு நாடுகளின் கரன்சி மதிப்பு குறையத் தொடங்கி உள்ளது. உலகளாவிய பங்குச்சந்தைகளில் நிலையற்ற தன்மை காணப்படுகிறது. தங்கம் விலை உயர்ந்து வருகிறது. டிரம்பின் நடவடிக்கையால் உலக அளவில் வர்த்தக போர் குறித்த கவலை அதிகரித்துள்ளது. இந்நிலையில், கனடா மற்றும் மெக்சிகோ உட்பட அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியம் மீது அமெரிக்கா 25 சதவீதம் வரை கூடுதல் வரிகளை விதிப்பது குறித்து முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் என டிரம்ப் தெரிவித்தார். வார இறுதியில் பிற இறக்குமதி வரிகள் விதிக்கப்படும் என்றும் டிரம்ப் கூறியிருக்கிறார்.
இதேபோல் மற்ற நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு வரி விதித்தால், அந்த நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவும் இறக்குமதி வரிகளை விதிப்பது (பரஸ்பர வரிகள்) தொடர்பாக அறிவிப்பேன் என்று டிரம்ப் மீண்டும் கூறி உள்ளார்.