மேற்படி நிகழ்வானது பாடசாலை முதல்வர் திரு.கு.லங்காபிரதீபன் தலைமையில் னுசு. ரட்ணம் நித்தியானந்தன் அவர்களின் அனுசரனையுடன் யா/வட்டு இந்துக்கல்லூரியில் 05.02.2025 புதன்கிழமை 12.00 மணிக்கு நடைபெற்றது. இதில் அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட இளம் விவசாய விஞ்ஞானப்போட்டியில் தங்கப்பதக்கத்தைப் பெற்ற ஜந்து மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். இதில் பிரதம விருந்தினராக கலாநிதி ரட்ணம் நித்தியானந்தன் (Ratnam Founder U.K) அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக, S.ரமேஸ் (Agricuture Instructor ,Office of the Deputy Director of Agriculture ) P. அருந்தவம் (In service Advisor Zonal Education Office Valikamam) A.கோகுலராஜன் (Manager Jaffna Field Study Centre) ஆகியோரும் கலந்துகொண்டனர். அத்தோடு பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வினை தலைமை தாங்கி நடாத்திய பாடசாலை அதிபர் அவர்கள் அந்நிகழ்விற்கு அனுசரனை வழங்கிய னுசு.நித்தியானந்தன் அவர்களுக்கு நன்றி கூறியதோடு வெற்றி பெற்ற மாணவர்களையும் வழிப்படுத்திய ஆசிரியரையும் தேவையான வழிகாட்டல்களை வழங்கிய சிறப்பு விருந்தினர்களையும் நன்றியுடன் பாராட்டினார். அத்துடன் இந் நிகழ்வில் பிரதம விருந்தினர்கள் உரையாற்றும் போது இன்று மாணவர்கள் பல சவால்களின் மத்தியில் தமது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது எனவும் இம் மாணவர்கள் அவற்றையும் தாண்டி சாதனையைப் புரிந்துள்ளார்கள் எனவும் பாராட்டியதோடு அவர்களை வழிப்படுத்திய ஆசிரியரையும் ஒத்துழைப்பு நல்கிய பெற்றோர்களையும் பாராட்டினர்.
சிறப்பு விருந்தினர்கள் உரையாற்றும் போது யாழ் மாவட்டத்தில் அதிகூடிய மாணவர்கள் தங்கப்பதக்கத்தைப் பெற்றுக்கொண்ட பாடசாலை யா/வட்டு இந்துக்கல்லூரியாகும் எனவும் அதற்கு ஆசிரியரதும் மாணவர்களதும் அயராத உழைப்பே காரணம் எனவும் கூறி இனிவரும் காலங்களிலும் இவர்கள் பல வெற்றிகளைப் பெற வேண்டும் எனவும் வாழ்த்தினர்.