பிரான்சில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின்போது இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேம்படுத்துதல், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு மற்றும் உலகளாவிய மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர். அப்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்தவும், இந்தோ-பசிபிக் கூட்டாண்மை மற்றும் பல்வேறு உலகளாவிய முயற்சிகளில் தங்கள் ஒத்துழைப்பு மற்றும் ஈடுபாட்டை மேலும் வலுப்படுத்தவும் உறுதிபூண்டனர். உலகளாவிய செயற்கை நுண்ணறிவு துறையை சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் வகையில் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்தனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு இரு தலைவர்களும் கூட்டறிக்கை வெளியிட்டனர். அதில், ஐ.நா. பாதுகாப்பு சபையில் சீர்திருத்தம் தேவை என்பதை இரு தலைவர்களும் வலியுறுத்தினர். மேலும் ஐ.நா. பாதுகாப்பு சபை விஷயங்கள் மற்றும் பல்வேறு உலகளாவிய பிரச்சினைகளில் ஒருங்கிணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டனர். வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்த அழைப்பு விடுத்தனர். ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு பிரான்ஸ் உறுதியான ஆதரவை வழங்கும் என பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மீண்டும் உறுதி அளித்தார்.
![பிரதமர் மோடி- பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பேச்சுவார்த்தை](https://uthayannews.ca/wp-content/uploads/2025/02/Pm-modi-french-president-macron-speach.jpg)