‘காதல் என்பது பொதுவுடமை’ திரைப்படம் இயக்குனர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் லிஜோமோல், வினித், ரோகிணி, கலேஷ், தீபா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர்கள் வினீத், ரோகிணி, லிஜாமோல் ஜோஸ், கலெஸ், அனுஷா, பாடலாசிரியர் உமாதேவி, ஒளிப்பதிவாளர் சரவணன், எடிட்டர் டேனி, இசையமைப்பாளர் கண்ணன் நாராயணன் இந்த படத்தை வெளியிடும் தயாரிப்பாளர் தானஞ்செயன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் மணிகண்டன், இயக்குநர் சசி, இயக்குநர் பாலாஜி தரணிதரன், நெல்சன் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகை ரோகினி பேசுகையில், “இந்தப் படம் ஏன் ‘கூடாது’ என்பது தான், படம் எடுப்பதற்கான முதல் காரணம்.
இந்தப் படத்தை மலையாளத்தில் எடுக்க சொன்னபோது, ‘இல்ல என் தமிழ் ஆடியன்ஸ் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என்று ஒரு இயக்குநர் இப்படத்தைக் கொண்டு வந்துள்ளார். இது சம்பந்தமான உரையாடலை எங்குத் தொடங்கவேண்டும் என யோசித்து, குடும்பத்தில் துவங்க வேண்டும் என ரொம்ப அற்புதமாக எழுதியுள்ளார். நான் குணச்சித்திர நடிகையாக நடிக்க ஆரம்பித்த பின், இது போன்ற கதாபாத்திரத்தில் நடித்தது இல்லை. இந்த லக்ஷ்மி கதாபாத்திரத்தில் என்னால் சரியாகப் பண்ண முடியுமா என்று நினைத்தேன். எத்தனை எத்தனை கேள்விகள் இந்தச் சமூகத்தில் உள்ளதோ, அத்தனை கேள்விகளையும் லக்ஷ்மி மூலமாக இயக்குநர் கேட்க வைத்துள்ளார். நான் சமூகத்தின் முகமாக இந்தப் படத்தில் வருகின்றேன். அது ரொம்ப சவாலாக இருந்தது. அதுமட்டும் இல்லாமல், ரொம்ப அன்பான ஒரு அம்மாவின் பரிதவிப்பும் லக்ஷ்மியிடம் இருந்தது. நான் நிறைய அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.
விட்னெஸ், தண்டட்டி, 3 என நான் நடித்த ஒவ்வொரு அம்மாவும் வேற வேற அம்மா. ஹீரோவிற்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்று இயக்குனர்கள் கூறினால் ஹீரோவிற்கு அம்மா யாரு? கோபமானவங்களா? கஷ்டப்பட்டு வந்தவங்களா? இல்ல கர்வமா பேசுறவங்களா? அவர்களால் கதையில் ஏதாச்சும் நடக்குமா? என்று கேட்பேன். சில படத்தில் தான் நான் ரொம்ப சரியாக நடித்திருக்கிறேன் என்ற திருப்தி இருக்கும். அது போல் இந்த லக்ஷ்மி கதாபாத்திரமும் ஒன்று. இது எங்களின் கதை. ஒரு அம்மா – மகள் கதை. இந்தப் படம் பேசும் அரசியலை மீறி, இந்தப் படம் உங்களை உற்சாகம் அடைய செய்யும். இங்கும் மலையாளப் படங்கள் போல் நல்ல படங்கள் எடுக்க முடியும், அதை ஆதரிக்க தமிழ் ஆடியன்ஸ் தயாராக இருக்கிறார்கள் என்பதை நாம் நிரூபித்து காட்ட வேண்டும். எல்லாவற்றையும் விட, பேசாத பொருளைப் பேசுவது தான் ஒரு கலையின் வேலை ! அதுதான் கலையின் பொறுப்பும் அழகும். அதை நாங்கள் செய்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.