கடந்த திங்கட்கிழமை கொழும்பில் உள்ள இலங்கைக்கான ஐநா பொறுப்பதிகாரியும் ஐநாவின் ஏனைய உறுப்புகளுக்கு பொறுப்பான அதிகாரிகளும் சிவில் சமூகப் பிரதிநிதிகளை சந்தித்தார்கள். திருநெல்வேலியில் அமைந்துள்ள திண்ணை விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், ஐநாவின் இலங்கைக்கான பொறுப்பதிகாரி கருத்துத் தெரிவிக்கையில், உலகத்தின் கவனம் மத்திய கிழக்கின் மீதும் கிழக்கு ஐரோப்பாவின் மீதும் குறிப்பாக காசா உக்ரைன் போன்றவற்றிலும் குவிந்திருக்கும் ஒரு பின்னணியில், ஈழத் தமிழர்களின் விவகாரத்தின் மீதான ஐநாவின் கவனக் குவிப்பு குறைவாக இருக்கும் என்ற பொருள்படக் கதைத்துள்ளார்.
அது ஒரு பூகோள யதார்த்தம். எரியும் பிரச்சினைகள் புதிதாக தோன்றியிருக்கும் ஒரு பின்னணியில், ஈழத் தமிழர்கள் விவகாரம் என்பது உலக சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்கான வாய்ப்புகள் குறைகின்றன. கடந்த 15 ஆண்டுகளிலும் நிலைமை அவ்வாறுதான் படிப்படியாக மாறி வருகிறது. இந்த விடயத்தில் ஈழத் தமிழர்கள் உலகத்தின் கவனத்தை ஈர்க்கத்தக்க விதத்தில் நமது பிரச்சினைகளை கொதி நிலையில் வைத்திருக்கவில்லையென்றால் ஐநாவின் கவனக்குவிப்பு மட்டுமல்ல ஏனைய உலகப் பேரரசுகளின் கவனக் குவிப்பும் குறைந்துவிடும்.
அப்படியென்ன்றால் ஈழத் தமிழர்கள் தமது போராட்டத்தை கொதிநிலையில் வைத்திருக்க வேண்டும் என்று பொருள்.
ஈழத் தமிழர்கள் தமது அரசியல் அபிலாசைகளுக்காக போராடுகிறார்கள். ஆனால் தெட்டம் தெட்டமாக,ஆங்காங்கே சிறிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவை கவனயீர்ப்பு போராட்டங்கள்தான். குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராடும் சங்கங்கள் இடைக்கிடை போராடுகின்றன. கிழக்கில் மேச்சல் துறைக்காக போராடும் பண்ணையாளர்கள் அவ்வப்போது ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக மாறுவார்கள். இப்பொழுது தையிட்டி.
வெடுக்குமாரி மலை, குருந்தூர் மலே போன்றவை ஏற்கனவே அவ்வாறு ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக வந்தன.இப்பொழுது இல்லை.இப்படித்தான் இருக்கிறது ஈழத் தமிழர்களின் போராட்டக் களம். தொடர்ச்சியாக அரசாங்கத்தின் கவனத்தையும் வெளி உலகத்தின் கவனத்தையும் தவிர்க்கப்பட முடியாதபடி கவர்ந்து வைத்திருக்கத்தக்க விதத்தில் உக்கிரமான எழுச்சியான போராட்டங்கள் அநேகமாக இல்லை.
இவ்வாறு தமிழ் மக்களின் போராட்டங்கள் சிறு திரள் போராட்டங்கள் ஆகவும் பெருமளவுக்கு கவன ஈர்ப்புப் போராட்டங்களாகவும் இடைக்கிடை, ஆங்காங்கே இடம்பெறுகின்ற தொடர்ச்சியில்லாத, ஒருங்கிணைக்கப்படாத போராட்டங்களாகவுந்தான்காணப்படுகின்றன.
குறிப்பாக, தையிட்டி போராட்டம் என்பது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்படும் ஒன்றாகும்.ஒவ்வொரு பௌர்ணமி நாளும் அந்தக் கட்சியானது அந்த விகாரையின் வாசலில் நின்று போராடுகிறது. கடந்த 20 மாதங்களாக அப்போராட்டங்களில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள்தான் பெரும்பாலும் நிற்பார்கள். திரும்பத் திரும்ப ஒரே முகங்கள். ஏனைய தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளையும் அங்கே கொண்டு வர முடிவதில்லை.அப்போராட்டம் தொடங்கிய புதிதில் அங்கஜன் ராமநாதன் போராட்டக்காரர்கள் மத்தியில் காணப்பட்டார். ஆனால் அதைத் தமிழ் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் அவர் பங்குபற்றுவதில்லை.சில நாட்களுக்கு முன் டக்ளஸ் தேவானந்தா அந்த போராட்டத்திற்கு ஆதரவாக கருத்து வெளியிட்டிருக்கிறார்.
கடந்த புதன்கிழமை நடந்த போராட்டத்தில் ஒப்பீட்டளவில் அதிக தொகை மக்கள் பங்குபற்றினார்கள் சிறீதரன் உட்பட தமிழரசுக் கட்சி, டெலோ போன்று ஏனைய கட்சிகளும் போராளிகள் நலன்புரி அமைப்புப் போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் அங்கே காணப்பட்டார்கள்.
இந்த விவகாரத்தை சூடாக்கியது எதிர்மறை அர்த்தத்தில் அர்ஜுனாதான். கட்டி முடிக்கப்பட்ட விகாரையை இடிக்கக்கூடாது என்ற வாதத்தை அவர் முன்வைக்கிறார். வட மாகாண ஆளுநரும் அந்த நிலைப்பாட்டுக்குக் கிட்டவாக நிற்கிறார். இது தமிழ் மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அது காரணமாக கட்சி வேறுபாடுகளைக் கடந்து அரசியல் செயற்பாட்டாளர்கள் கடந்த புதன்கிழமை தையிட்டியில் கூடினார்கள்.
மு திருநாவுக்கரசு, பேராசிரியர் சிவத்தம்பி ஆகிய இருவரும் பகிடியாகச் செல்வார்கள், “எதிரிதான் தமிழ்த் தேசியத்தின் நண்பன்” என்று. எப்படியென்றால், ஆக்கிரமிப்பும் அடக்கு முறையும்தான் தமிழ் மக்களை போராடத் தூண்டுகின்றன என்ற பொருளில். எதிரியின் அடக்குமுறை அதிகரிக்கும் பொழுது தமிழ் கட்சிகள் வேறுபாடுகளை மறந்து கொதித்தெழுந்து ஒன்றுதிரள்வது உண்டு. ஆக்கிரமிப்பும் அடக்கு முறையும் குறையும் பொழுது அல்லது மறைமுகமானவைகளாக மாறும்போது தமிழ் மக்கள் உக்கிரமாகப் போராடுவதில்லை. அதாவது எதிர்த் தரப்பு தூண்டும் போதுதான் தமிழ்த் தரப்பு போராட எழுகிறதா? ஒன்றுபடுகிறதா?
தையிட்டி விவகாரத்திலும் அரசாங்கம் விகாரையை இடிக்கத் தயாரில்லை என்பதும் அந்த விகாரையை இடிக்கக் கூடாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுனா கூறுவதும்தான் அந்த விடயத்தின் மீதான கவனக் குவிப்பைச் செறிவாக்கின.
அதாவது தமிழ்த் தரப்பின் போராட்டம் எனப்படுவது நான் திரும்பத் திரும்ப கூறுவது போல பெருமளவுக்கு ‘ரியாக்டிவ்‘ ஆனதாகத்தான் காணப்படுகிறது. வெளித் தரப்புகளின் நகர்வுகளுக்குப் பதில் வினையாற்றும் அரசியல். மாறாக ”ப்ரோ ஆக்டிவ்‘ ஆனதாக இருப்பது ஒப்பீட்டளவில் குறைவு. அதாவது தமிழ்த் தரப்பு முன்னெடுக்கும் செயலூக்கம்மிக்க நடவடிக்கைகளின்மூலம் வெளித்தரப்புகளை தமிழ்த் தரப்பை நோக்கி ஈர்த்து வைத்திருப்பது அல்லது வெளித் தரப்புகளை தமிழ்த் தரப்புக்கு எதிராகவோ அல்லது சாதகமாகவோ பதில் வினையாற்றச் செய்வது குறைவு.
கடந்த 15 ஆண்டுகால தமிழ் மக்களின் போராட்ட வடிவம் அவ்வப்போது ‘ப்ரோஆக்டிவ்‘ ஆகவும் பெருமளவுக்கு ”ரியாக்ட்டிவ்”ஆனதாகவுமே இருந்து வருகிறது.
ஒரு நாடற்ற அரசற்ற மக்கள் கூட்டம் ப்ரோ ஆக்டிவாக போராடுவது என்று சொன்னால் அதற்கு உரிய கட்டமைப்புகள் வேண்டும்.தயாரிப்புகள் வேண்டும் மார்க்சிஸ்ருக்கள் மிகத் தெளிவாகக் கூறுவார்கள், புரட்சிகரமான ஸ்தாபனம் இல்லாமல் புரட்சி இல்லை. புரட்சிகரமான சித்தாந்தம் இல்லாமல் புரட்சிகரமான ஸ்தாபனம் இல்லை என்று. அதாவது பெரிய இலட்சியங்கள் இருந்தால் மட்டும் போதாது.அந்த இலட்சியங்களை அடைவதற்கான வழிமுறைகளை, கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். கட்டமைப்புகளுக்கு ஊடாகத்தான் தமிழ் மக்களை நிறுவனமயப்படுத்தலாம்.
ஆனால் எந்த ஒரு தமிழ்த் தேசியக் கட்சியிடமும் அது தொடர்பான பொருத்தமான தரிசனங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. உள்ளதில் பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சி தானே ஒரு ஸ்தாபனமாக, இறுக்கமான கட்சியாக இல்லை.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளோடு ஒப்பீட்டளவில் பலவீனம் அடைந்து விட்டது. சங்குக் கூட்டணி அதைவிடப் பலவீனம்.
இதுதான் தமிழ் தேசியப் பரப்பின் நிலை. இந்த கட்சிகளை ஒருங்கிணைக்கவல்ல சிவில் சமூகங்களும் இப்பொழுது துடிப்பாக இல்லை.அதற்குக் காரணம் ஜனாதிபதி தேர்தலில் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்திய பின்னரான நிலைமைகள்தான். பொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்திய தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு எனப்படுவது சிவில் சமூகங்களும் கட்சிகளும் இணைந்து உருவாக்கிய ஒரு பரிசோதனை முயற்சி. ஆனால் அந்தப் பரிசோதனையின் விளைவாக சிவில் சமூகங்கள் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின்னரான ஒருங்கிணைப்பு முயற்சிகளில் வெளிப்படையாக இறங்கத் தயாரில்லை.
ஆனால் இது ஒரு தற்காலிகப் பின்னடைவு தான்.சிவில் சமூகங்கள் மீண்டும் முன் கை எடுக்க வில்லையென்றால் கட்சிகளை யாருமே ஒருங்கிணைக்க முடியாது. ஏனென்றால் தாங்களாக ஒன்றிணையும் அளவுக்கு கட்சிகள் பக்குவமாக இல்லை. தாங்களாக ஒன்றிணைய முடியாதபடி கட்சிகள் பிளவுண்டு காணப்படுகின்றன. கட்சிகளுக்குள்ளையே பிளவுகள்.ஐக்கியத்தை உருவாக்க ஒன்றில் கட்சிகளுக்குள் இருந்து ஜனவசியம் மிக்க பரந்த மனப்பான்மை கொண்ட தலைவர்கள் வரவேண்டும். இல்லையென்றால் கட்சிகளுக்கு வெளியில் இருந்து யாராவது முயற்சிக்க வேண்டும்.
அந்த முயற்சிகள் பெரும்பாலும் மூன்று வகைப்படும். முதலாவது வகை, கட்சிகளைக் கூப்பிட்டு ஒரு மேசையில் அமர்த்தி இதைச் செய் என்று கூறுவது. விடுதலைப் புலிகள் இயக்கம் அதைத்தான் செய்தது. அதைச் செய்வதற்கு அந்த இயக்கத்திடம் வல்லமை இருந்தது. ஆனால் சிவில் சமூகங்களிடம் அப்படியான பலம் கிடையாது.
இரண்டாவது, ஒற்றுமை முயற்சிகளுக்கு அனுசரணை புரிவது. கடந்த 15 ஆண்டுகளாக சிவில் சமூகங்கள் அதைத்தான் செய்து வருகின்றன.அப்படிச் செய்வதற்குரிய ஆன்ம பலம் சிவில் சமூகங்களிடம் உண்டு. அதற்கும் அப்பால் நிதிப் பலம் அல்லது அரசியல் பலம் சிவில் சமூகங்களிடம் கிடையாது.ஜனாதிபதித் தேர்தலின் போது கற்றுக் கொண்ட பாடம் அது.
மூன்றாவது, கட்சிகளை ஒன்றிணைப்பதற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொடுப்பது. சந்திப்புகளுக்கு ஏற்பாடுகளைச் செய்து கொடுப்பது. இடைத் தொடர்பாளர்களாகச் செயற்படுவது.
இந்த மூன்று விதமான வழிகளிலும்தான் குடிமக்கள் அமைப்புகளோ அல்லது மத நிறுவனங்களோ அல்லது சமூகப் பெரியார்களோ கட்சிகளை ஒருங்கிணைக்கலாம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பொழுது விடுதலைப் புலிகள் இயக்கம் இதில் முதலாவது வழிமுறையைக் கையாண்டது. ஜனாதிபதித் தேர்தலின் போது சிவில் சமூகங்கள் இதில் இரண்டாவது அல்லது மூன்றாவது வழிமுறையை கையாண்டன.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரணி, பல்கலைக்கழக மாணவர்களின் ஒருங்கிணைப்பு முயற்சிகள் போன்றவற்றிலும் மூன்றாவது வழிவகை கையாளப்பட்டது.
ஆனால் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரான தொகுக்கப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில், சிவில் சமூகங்கள் பெருமளவுக்கு முன்கை எடுக்காத ஒரு நிலைமைதான் காணப்படுகின்றது. கஜேந்திரகுமாரின் ஒருங்கிணைப்பு முயற்சிகளுக்கு ஊக்கமாக ஒரு சிவில் சமூகம் காணப்படுகின்றது.ஆனால் அவர்கள் வெளிப்படையாக அதைச் செய்யவில்லை. அதை அவர்கள் வெளிப்படையாகச் செய்ய முடியாத அளவுக்கு அரசியல், சிவில் சமூகச் சூழல் காணப்படுகிறது.
எனவே இப்பொழுது இரண்டு முடிவுகளுக்கு வரலாம். ஒன்று சிவில் சமூகங்கள் மீண்டும் தங்களைப் பலப்படுத்திக் கொண்டு கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கு புதிய உபாயங்களை வகுப்பது. இரண்டாவது கட்சிகளை அப்படியே அவற்றின் போக்கில் விட்டுவிட்டு ஆர்வம் உடையவர்களும் அர்ப்பணிப்புக்குத் தயாராக இருப்பவர்களும் ஒரு மக்கள் இயக்கத்தைக் கட்டி எழுப்புவது.அந்த மக்கள் இயக்கம் தன்னைப் படிப்படியாகப் பலப்படுத்திக் கொண்டு, அதன்பின் கட்சிகளைக் கையாள்வது.இந்த இரண்டில் ஒரு முடிவை எடுக்கலாம்.இதுதான் தமிழ் பொது வேட்பாளருக்கு பின்னரான தமிழ் அரசியல் சூழல்.கடந்த புதன்கிழமை தையிட்டியில் கட்சிகள் ஒப்பீட்டளவில் ஒன்றாக நின்றமை வரவேற்கத்தக்கது. இங்கிருந்தும் தொடங்கலாம்.