வடமராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட மிகவும் பின்தங்கிய பாடசாலைகளில் ஒன்றாக காணப்படக்கூடிய யா/கற்கோவளம் மெ.மி.த.க பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திறன் வகுப்பறை அங்குரார்ப்பண நிகழ்வு பாடசாலை அதிபர் திரு.ஜெயமோகன் தலைமையில் கடந்த பிப்ரவரி 11ம் திகதி நடைபெற்றது.
இரட்ணம் பவுண்டேஷன் மற்றும் விசன்ஸ் குளோபல் எம்பவர்மென்ட் நிறுவனங்களின் நிதி ஒதுக்கீட்டில் இந்த பாடசாலையில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களின் நவீன கற்றல் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக இந்த திறன் வகுப்பறையானது வழங்கி வைக்கப்பட்டது. மேலும், விசன்ஸ் குளோபல் எம்பவர்மென்ட் நிறுவனத்தின் “இளையோர் கனவு மெய்படல்” திட்டத்தின் மூலம் இப்பாடசாலையில் வாழ்க்கைத் திறன் அமர்வுகள், தலைமைத்துவ பயிற்சிகள், சமூக செயற்பாட்டுத் திட்டங்கள் என்பன இப்பாடசாலையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இரட்ணம் பவுண்டேஷன் நிறுவனத்தின் ஸ்தாபகர் திரு.இரட்ணம் நித்தியானந்தன் மற்றும் அவரது பாரியாரால் வைபவ ரீதியாக தொடங்கி வைக்கப்பட்ட இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் வடமராட்சி வலயக் கல்விப்பணிப்பாளார் திரு.க.சத்தியபாலன், விசன்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு.அ.மயூரன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர். பாடசாலை ஆசிரியர்களும், மாணவர்களும் திறன் பலகையை பயன்படுத்தி கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளும் முன்னோட்ட நிகழ்வும் நடாத்தப்பட்டது.
மாணவர்களது கல்வியில், தொலைபேசி மற்றும் போதைவஸ்து போன்றவை அதிகம் பாதிப்பினை ஏற்படுத்தும் இக்காலத்தில், மாணவர்கள் விழிப்புடன் செயற்படவேண்டும் என திரு.இரட்ணம் நித்தியானந்தன் குறிப்பிட்டார். அதே நேரத்தில், திறன் வகுப்பறையின் பயன்பாடானது ஆரம்பப் பிரிவு மாணவர்கள் தொடக்கம் க.பொ.த சாதாரண தர மாணவர்கள் அனைவரினது கல்விக்கும் வினைதிறனான தொடர்ச்சியான உந்துதலாக காணப்படும் எனவும், இவ்வாறான உதவிகள் மாணவர்களையும் சமுதாயத்தினையும் உயர்நிலைக்கு இட்டுச்செல்லும் எனவும் தெரிவித்த வலயக் கல்விப் பணிப்பாளர், இந்த திறன் வகுப்பறையை வழங்கிய இரட்ணம் பவுண்டேஷன் மற்றும் விசன்ஸ் குளோபல் எம்பவர்மென்ட் நிறுவனங்களுக்கு தனது நன்றியை தெரிவித்தார்.
தொடர்ந்து, யா/இமையாணன் அ.த.க வித்தியாலயத்தில் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட சிறுவர் முற்றத்தினை இரட்ணம் பவுண்டேஷனின் நிதி அனுசரணையில், விசன்ஸ் குளோபல் எம்பவர்மென்ட் நிறுவனமானது புணரமைத்து பாடசாலையிடம் கையளிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.