(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்)
(15-02-2025)
ஏர் நிலம் தொண்டர் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழர் திருநாளாம் தைத்திருநாள் பொங்கல் விழா நிகழ்வு மற்றும் மூத்த உழைப்பாளர்களை கெளரவிக்கும் நிகழ்வும் 15ம் திகதி அன்று சனிக்கிழமை காலை அடம்பன் மாளிகைத்திடல் மாணிக்க பிள்ளையார் கோவில் வளாகத்தில் இடம்பெற்றது.
வருடா வருடம் இடம் பெறும் குறித்த நிகழ்வு இவ்வருடம்”நம்பி கை கொடுப்போம்” “நம்பிக்கை கொடுப்போம்”எனும் தொனிப்பொருளில் பாரம்பரிய பொங்கல் நிகழ்வுடனும் அதே நேரம் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மூத்த உழைப்பாளர்களை கெளரவிக்கும் முகமாகவும் ஒழுங்கு செய்யப்பட்டு இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட ஏர் நில அமைப்பின் இணைப்பாளர் கவிஞர் பெனில் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக மாந்தை மேற்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் டிலைக்ஸன் ,மாளிகைதிடல் கிராம உத்தியோகஸ்தர் லீனற் அருள் மதி சந்தியாகு,கமநல அபிவிருத்தி உத்தியோகஸ்தர் பிரியந்தன் உட்பட ஏர்நில அமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
குறித்த நிகழ்வின் போது வரவேற்பு நடனம், கிராமிய நடனம், கவிதை,பேச்சு, ஆகிய நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்ட 27 மூத்த உழைப்பாளர்கள் பொன்னாடை போர்த்தி மாலை அணுவிக்கப்பட்டு நினைவு சின்னங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
அதே நேரம் நிகழ்வில் பல்வேறு கலைநிகழ்வுகளை அரங்கேற்றம் செய்த பாடசாலை மாணவர்களுக்கு சான்றிதல்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.