பு.கஜிந்தன்
யாழ். தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எழுதுமட்டுவாள் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரக்குற்றிகளை சூட்சுமமாகக் கடத்திச் சென்ற பாரவூர்தி ஒன்றை கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் 15ம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் எழுதுமட்டுவாள் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய கொடிகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரணசிங்க அவர்களின் வழிகாட்டலில், போக்குவரத்து பிரிவுப் பொறுப்பதிகாரி உதவிப்பொலிஸ் பரிசோதகர் நிலந்த மற்றும் போக்குவரத்துப் பிரிவு உதவிப் பொறுப்பதிகாரி தம்பிராஜா தர்மரத்தினம் அவர்களினாலும் எழுதுமட்டுவாள் சோதனைச்சாவடியில் கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் உதவியுடனும் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதில் சுமார் 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான வேம்பு, நாவல் மரக் குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கைப்பற்றப்பட்ட மரக்குற்றிகளையும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.