மனித வாழ்வில் குழந்தை பிறக்கிறது திருமணம் நடக்கிறது இவ்வாறு பல நிகழ்வுகள் நடைபெறுகின்றன. ஒரு நாள் நடைபெறும் நிகழ்வு பின் வருடாவருடம் அவற்றின் ஞாபகார்த்தம் ஒவ்வொருநாளில் கொண்டாடுகிறோம். இவ்வாறு ஒரு நிகழ்வு நிஷமாக நடப்பதும் பின் அதைக் கொண்டாடுவதும் இயல்பாகிவிட்டது. இவை பௌதீகமானது. இதேபோல் ஆத்மாக்களாகிய எமக்கு எம் தந்தையாகிய பரமாத்மாகிய சிவனுடன் உள்ள தொடர்பு அநாதியானது. அந்த தொடர்பும் கூட ஏதோ ஒரு நேரத்தில் நேரடியாக ஏற்படுகிறது. அதுவே பின்னர் ஞாபகார்த்தங்களாக பக்தியின் சம்பிரதாயங்களாக சந்தித்த அதே மனிதரால் உருவாக்கப்படுகிறது. ஆனால் மனித வாழ்வு ஒரு சக்கரம் ஆகும். இதில் சுழல்பவர்களான அழியாக ஆத்மாக்களின் பரமாத்மாவுடனான நேரடியான சந்திப்பும் பின்னர் அவற்றின் ஞாபகார்த்தமான பக்தியின் சம்பிரதாயங்களும் மாறிமாறி வருகின்றன.
ஒவ்வொரு செயலுக்கும் அதற்கான விதிமுறையும் உரிய நேரமும் உண்டு. அதன்படி கலியுக இறுதிவேளையாகிய தற்போதைய நேரம் ஒரு சக்கரம் முடிவுக்கு வருவதால் அடுத்த சக்கரத்திற்கான படைப்புக்கான நேரமுமாகும். அதாவது இதுவரையான ஞாபகார்த்தங்கள் முடிவுக்கு வருதலும் அடுத்த புதிய படைப்பை உருவாக்குபவரான தந்தையான கடவுளும் குழந்தைகளான ஆத்மாக்களும் மீண்டும் ஒருமுறை நேரடியாக சந்திப்பதன் மூலம் குழந்தைகள் மறுபடியும் புதிய படைப்பாக படைக்கப்படும் நேரமாகும். ஆகவே கலியுக இறுதிநேர பக்தியின் சம்பிரதாயங்கள் செய்து வெறுமனே ஞாபகார்த்தங்களைக் கொண்டாடுவதிலிருந்து விழிப்படைந்து தம்மை விடுதலையாக்கி மீண்டும் புண்ணிய ஆத்மாக்களாக மாறும் நேரமிதுவே
அதன்படி சிவராத்திரி எனும் சிவவிரதம் எமக்கு தரும் சிந்தனை என்ன எனப் பார்ப்போம்.
1) மகத்துவம் வாய்ந்த இந்த சிவவிரதம் ஏன் இராத்திரி வேளையில் அனுட்டிக்கப்படுகிறது?
இந்த சம்பிரதாயம் யாரால் உருவாக்கப்பட்டது?
இராத்திரி என்பது பௌதீக இரவு மற்றும் ஆன்மீக இரவு என இரண்டு வகை உண்டு. ஆன்மீகமான சிவவிரதம் அறியாமை எனும் ஆன்மீக இருளைக் குறிப்பதாகும். ஆனால் இன்றைய மனிதர் தம்மை ஆத்மா என்பதைக் கூட மறந்தவர்களாகி சரீரஉணர்வுடையவர்களாகி ஆன்மீக விழிப்புணர்வற்றவராக இருப்பதால் பௌதீக இராத்திரியில் இவ்விரதத்தை அனுட்டிக்கின்றனர்.
சக்கரத்தின் இறுதி வேளையில் துன்பத்தின் அதி உச்சவேளையில் தர்மத்தை நிலைநாட்ட அவதரித்த கடவுளைச் சந்தித்து துன்பம் நீங்கப் பெற்றவர்களான மனிதர்களே பின்னால் அவர்கள் பிறப்பு இறப்புக்கு உட்பட்டு தூய்மையிழந்து பலவீனப்பட்டபின்னரே பக்தி மார்க்கத்தின் சம்பிரதாயங்களை உருவாக்கினார்கள்.
2) மனிதராலேயே இத்தகைய வழிபாட்டு சம்பிரதாயம் உருவாக்கப்பட்டுள்ளது என்றால் துன்பத்தின்போது கடவுளே என அதே மனிதர் ஏன் அண்ணாந்து மேலே பார்க்கிறார்கள்? இதில் எது சரியானது?
இரண்டும் சரியானதே ஆகும்.ஏனெனில் நாம் அனைவரும் ஆத்மாக்களே. ஆத்மாக்களான நாமும் தந்தையான பரமாத்மாவும் வசிக்கும் வீடு மேலேயுள்ள பரந்தாமம் ஆகும். ஆத்மாக்களாகிய நாம் இவ்வுலகிற்கு வந்து சரீரம் எடுக்கவேண்டும். ஆனால் தந்தையோ பிறப்பு இறப்புக்கு அப்பாற்பட்டவர். ஆகவே மேலே பரந்தாமத்திலேயே வசிப்பவர். ஆகவே நிரந்தர வசிப்பிடமான மேலே பரந்தாமத்தை காட்டுவது சரியே.
அடுத்து எமக்காக கீழே இறங்கி வந்து வந்து எமக்கு செய்த நன்மைக்காக இங்கே ஞாபகார்த்தமாக உருவாக்கி வழிபாடு செய்கிறார்கள். நன்றியுணர்வின் அடிப்படையில் அதுவும் சரியே. ஆனால் உண்மையில் அவரை எங்கே எப்படி சரியாக அறிந்து தொடர்பு கொள்வது என்பது கடவுள் வரும்போது மட்டுமே அவர் விளங்கவைக்கிறார்.
3) சிவராத்திரி விரதம் ஏன் மகாசிவராத்திரி எனக் கூறப்படுகிறது?
புதிய உலகைப் படைப்பவரான கடவுள் அதர்மம் தலைதூக்கும் போது தர்மத்தை நிலைநாட்ட அவதரிப்பேன் என குழந்தைகளுக்கு தான் செய்த சத்தியத்தை நிறைவேற்றவே ஒவ்வொரு சக்கரத்திலும் கலியுக இறுதியில் அவதரிக்கிறார். அவ்வாறு வரும்போது குழந்தைகளிடம் அவர்கள் துன்பத்திலிருந்து விடுபடவேண்டுமாயின் காமம் கோபம் பற்று போராசை அகங்காரம் போன்ற தீய குணங்களிலிருந்து தூய்மையாகுவோம் என்ற சத்தியத்தை செய்வித்தார். அவ்வாறு இரு பக்கமும் சத்தியத்தைச் செய்து அனுட்டிக்கும் விரதமாகையால் மகாசிவராத்திரி என்று ஆயிற்று.
4) இவ் விரதத்தில் கண் விழித்தல் முக்கியத்துவம் யாது?
எவ்வாறு இருளில் ஆன்மீக இருள் இருப்பது போல கண்களிலும் இரண்டு பௌதீகக் கண்கள் இருந்தாலும் அவை உடலுக்கானதாகும். மூன்றாவது கண்ணாகிய ஞானம் மூலம் தெய்வீகப்புத்தி எனும் ஆன்மீகக் கண்ணைத் திறப்பதே இங்கு கண்விழித்தல் எனக் குறிப்பிடும் கண்விழிப்பு ஆகும். கலியுகத்தில் அறியாமையால் புத்தியில் தெய்வீகம் இழந்து கல்புத்தி எனும் நிலையில் தவறும் பாவமும் துன்பமும் அதிஉச்சநிலையை அடைந்தது.ஆகவே சிவனின் அவதாரம் இன்றைய மனிதரை தெய்வீகப்புத்தி கொண்ட தேவர்களாக்குகிறது.
5) சிவன் சரீரம் எடுக்காதவர். எவ்வாறு இவ்வுலகில் மனிதராக இருப்பவர்க்கு வழிகாட்டும்
ஞானக்கல்வியைக் கற்பிக்கமுடியும்?
கடவுள் தனக்கென சரீரம் எடுக்காதவராயினும் சரீரம் எடுக்காதவராயினும் குழந்தைகளுக்காக ஒரு ஒரு சரீரத்தை தற்காலிகமாக கடனாக எடுக்கிறார். கலியுகத்தில் வாழ்ந்த மனிதரின் சரீரத்தை தன் கருவியாக்கி அவருக்கு பிரம்மா எனப் பெயரிட்டு பிரம்மாவின் கமலவாயினுடாகவே ஏனையவர்கட்கு இந்த ஞானம் மற்றும் யோகம் இரண்டும் இணைந்த கல்வியை கற்பிக்கின்றார். ஞானத்தின் மூலம் விவேகமானவராகவும் தியானத்தின் மூலம் இதுவரையான பாவத்தை அழித்து தூய்மையாகவும் ஆகும் இக்கல்வியை அகில உலகமெங்கும் பிரம்மாவின் மூலமாக உருவாக்கிய பிரம்ம குமாரிகள் உலக ஆன்மீகப் பல்கலைக் கழகத்தினுடாக கலியுக இறுதியாகிய தற்போதைய நேரம் கற்பித்துக் கொண்டிருக்கிறார்.
6) இப்போது சற்று சிந்திப்போமா?
உலக மனிதர் துன்பத்திற்காக கடவுளைக் கூப்பிட்டாலும் கூட துன்பத்திற்கான காரணத்தை அதாவது அதற்கான தம்மிடமுள்ள குறையை அறிந்து அதற்கான நிவாரணம் காணவேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லாத நிலையில் இருப்பதால் கடவுளிடம் அதைத் தாருங்கள் இதைத் தாருங்கள் அதன்மூலம் எமது துன்பம் தீரவேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இல்லாவிட்டால் இறைவனையே நொந்து கொள்கிறார்கள்.
ஆனால் கடவுளின் விருப்பம் என்ன? குழந்தைகள் தமது அறியாமை நீங்கி தமது சக்திகளை கண்டுணர்ந்து அவற்றை விருத்தியடையச் செய்வதன் மூலம் மீண்டும் அமைதி மற்றும் சந்தோஷமான வாழ்வை உருவாக்க வேண்டும் என்பதாகும். அதற்காகவே வழியையும் காட்டுகிறார்.
அடுத்து கடவுள் கருணைக்கடலாவார். அவருக்கு பயந்து விரதம் அனுட்டித்தல் நேத்திக்கடன் செய்தல் போன்றவற்றைச் செய்கின்றார்கள். அன்புக்கடலான கடவுள் எம் அனைவரதும் தந்தையாவார். பயப்படுவதற்குரியவரா? அடுத்து அவர் ஆன்மிகமானவர் இத்தகைய பௌதீகமான கிரியைகளால் சந்தோஷத்தைப் பெறுபவரல்ல. அத்துடன் இவற்றால் அவரை நாம் அடையவும் முடியாது. குருட்டு நம்பிக்கையோடு செய்கிறோம் தற்காலிக சந்தோஷத்தை பெறுகிறோம். ஆனால் நாம் இதுவரை செய்த செயல்களின் பாவம் அழியவும் இனிமேல் சரியான செயல் செய்யவும் மனிதமனம் மற்றும் புத்தி தூய்மையாக வேண்டும்.
ஒவ்வொரு மனிதரும் மனம் புத்தி தூய்மையாகி அமைதியாக வாழவேண்டுமாயின் புத்தி மூலமாக மனதை இறைவனோடு தொடர்புபடுத்தும் தியானம் மட்டுமே ஒரேஒரு வழியாகும். அதுவும் அவரைப்பற்றி அறியாமலே இருப்பவர்க்கு தானே தேடி வந்து தன்னை அறிவித்து இத்தியானக்கல்வியையும் கற்பிக்கின்றார்.
தன் குழந்தைகளுக்காகவே இறைவன் இக்கல்வியை இலவசமாக உலகம் முழுவதிலும் பிரஜாபிதா பிரம்மாவினுாடாக ஸ்தாபித்த பிரம்ம குமாரிகள் உலக ஆன்மீகப் பல்கலைக்கழகத்தினுாடாக கற்பித்துக்கொண்டிருக்கிறார்.
நேரத்திற்கேற்ப ஞானத்தைப் ஞானோதயம் பெற்று வாழ்வோமாக!
நன்றி
திருமதி ஞானா தனபாலசுந்தரம்
பிரம்ம குமாரிகள் உலக ஆன்மீகப் பல்கலைக் கழகம்
ஸ்காபரோ
416-439-9001