நடிகர் சூர்யா சினிமாவில் நடிப்பதோடு மட்டுமில்லாமல், ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில் அகரம் என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளை மூலம் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை தி நகரில் அகரம் அறக்கட்டளையின் புதிய அலுவல திறப்பு விழா நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர், இயக்குநர் த.செ.ஞானவேல் ஆகியோர் பங்கேற்றனர். அந்நிகழ்வில் சூர்யா பேசியதாவது, “கஜினி படத்தை முடித்த பிறகு 2006ஆம் ஆண்டு மக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் அவர்கள் அன்பை திருப்பிக் கொடுக்க வேண்டும் என நினைத்தேன். அப்போது பொருளாதார நெருக்கடியால் முதல் தலைமுறை மாணவர்களின் கல்வி கேள்விக்குறியா இருக்கிறது என த.செ.ஞானவேல் கேட்ட கேள்விதான் அகரம் அறக்கட்டளை தொடங்க காரணமாக அமைந்தது. அந்த விதை ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது. அந்த நேரத்தில் 10க்கு 10 அறையில் தான் அகரத்தை தொடங்கினோம். இப்போது 5,813 மாணவ, மாணவிகள் படித்து முடித்துள்ளார்கள். இன்னும் 2 ஆயிரம் பேர் படித்துக் கொண்டிருக்கிறார்கள். 20 ஆண்டுகளாக தொய்வடையாமல் வீரியத்துடன் அகரம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த இடம் படிப்புக்காக கொடுத்த நன்கொடையில் வாங்கிய இடம் கிடையாது. எனக்கு கிடைத்த வருமானத்தின் மூலம் கட்டிய இடம். நன்கொடையாக வரும் ஒவ்வொரு காசும், படிப்புக்காக பயன்படுத்தி வருகிறோம். எதற்காக இதை சொல்கிறேன் என்றால் தொடர்ந்து பத்தாயிரம் விண்ணப்பங்கள் வந்த வண்ணம் உள்ளது. அதனால் தேவை இன்னும் இருக்கிறது என்று புரிந்துகொள்ள முடிகிறது. இந்த இடம் எனக்கு தாய் வீடு மாதிரி. சொந்த வீடு கட்டியபோது இருந்த சந்தோஷத்தை விட, இங்கு நிறைய மாணவர்களையும் தன்னார்வளர்களையும் இணைக்கும் ஒரு அழகான நாளாக பார்க்கிறேன். அதனால் இங்கு வந்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” இவ்வாறு நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
