கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்து வரும் போப் பிரான்சிஸ் (வயது 88) கடந்த வாரம் உடல்நலம் பாதிக்கப்பட்டு ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவருக்கு சுவாச குழாயில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், போப்புக்கு சுவாச தொற்று அதிகரித்து காணப்படுகிறது. இதனால், அவருக்கு தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கின்றது. இதனால், அவர் மருத்துவமனையில் தொடர்ந்து தங்கி சிகிச்சை பெறுவார். இதுபற்றி வாடிகன் செய்தி தொடர்பாளர் மேத்யூ புரூனி கூறும்போது, வைரசுகள், பாக்டீரியா, பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணிகள் என பல வகையான தொற்று பாதிப்புகளால் போப் அவதிப்பட்டு வருகிறார். சமீப காலங்களாக அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மற்றும் நேற்று நடந்த பரிசோதனை முடிவில், அவருக்கு சுவாச குழாயில் கலவையான தொற்று ஏற்பட்டு இருக்கிறது என உறுதியாகி உள்ளது. இதனால், கடந்த வெள்ளி கிழமை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.