குரு அரவிந்தன்
ரொறன்ரோவில் ‘குடும்பநாள்’ கொண்டாடுவதற்காக வழமைபோல திங்கட் கிழமை விடுமுறை விட்டிருந்தார்கள். பொதுவாக இந்த நாளில் குடும்பமாக எல்லோரும் உணவகங்களுக்குச் சென்று உணவருந்தி, பரிசுகள் கொடுத்து மகிழ்வார்கள். ஆனால் சென்ற வாரம் முழுவதும் பனி கொட்டிக் கொண்டிருந்ததால், வீதிகள் பனியால் மூடப்பட்டிருந்தன. வார இறுதியில் ரொறன்ரோ முழுவதும் 16 முதல் 23 சென்டிமீட்டர் வரை பனி பெய்துள்ளது. வெளியே செல்வதைத் தவிர்க்கும்படி அறிவித்தல் வந்தாலும், அவசர தேவைக்காகச் சென்றவர்களின் வண்டிகள் விபத்தில் சிக்கிக் கொண்டன. நெடுஞ்சாலைகளில் அதிக விபத்துக்கள் ஏற்பட்டன. அதனால் அனேகமான குடும்பங்கள் குடும்பநாளை வீட்டுக்குள்ளேயே கொண்டாட வேண்டி வந்தது.
பொதுவாக வீதியில் உள்ள பனிக்குவியலை இயந்திரங்கள் மூலம் கரையில் அள்ளிப் போடுவார்கள். ஆனால் தொடர்ந்தும் ஒருவாரமாகப் பனி கொட்டிக் கொண்டிருப்பதால் பனிக்குவியலை அள்ளிப்போட இடமில்லாமல் இருக்கின்றது. வீதிகளைத் துப்புரவு செய்யக் குறைந்தது மூன்று வாரங்களாவது எடுக்கும் என்று கணிப்பிட்டிருக்கின்றார்கள். இன்றும் பனி கொட்டிக் கொண்டே இருக்கின்றது. இந்த வார இறுதியிலும் பனிப்புயலால் அதிக பனி கொட்டப்படலாம் என எதிர் பார்க்கப்படுகின்றது.
சென்ற திங்கட்கிழமை பியர்சன் விமான நிலையத்தில் மட்டும் சுமார் 1000 விமான சேவைகளில் 130,000 பயணிகள் பயணித்தனர். மினியாபோலிஸ்-செயின்ட் பால் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு வந்த டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் ரொறன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்போது பனிப்புயலில் சிக்கித் தலைகீழாகக் கவிழ்ந்ததில் ஒரு குழந்தை மற்றும் இரண்டு பெரியவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
விமானத்தில் 76 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் உட்பட 80 பேர் இருந்தனர். மதியம் 2:45 மணியளவில் சம்பவம் நடந்ததை அடுத்து அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த விபத்தில் உயிர் இழப்பு எதுவும் ஏற்படவில்லை. மூன்று ஏர் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர்கள் மற்றும் இரண்டு ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களை அருகிலுள்ள மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றனர்.
பனிப்புயல் காரணமாகப் பியர்சன் விமான சேவையில் சில சேவைகள் இரத்துச் செய்யப்பட்டன. 2023-20224 ஆண்டு குளிர்காலத்தைவிட இது அதிகமாக உள்ளது என்று செய்திகள் குறிப்பிடுகின்றன. பாடசாலை பேருந்துக்கள் இயங்காததால் மாணவர்களின் வருகையும் குறைவாகவே இருந்தது. பனிக்குவியல் காரணமாக சில வீதிகளில் வண்டித் தரிப்பிடத்தில் வண்டிகளை விடவேண்டாம் என்று பொலிசார் அறிவித்ததை கவனத்தில் கொள்ளாமல் விடப்பட்ட 1700 வண்டிகளுக்குத் தலா 200 டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.