அதிமுகவுக்கு உழைக்கும் உன்னதத் தொண்டன் செங்கோட்டையன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
கோவை விமான நிலையத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: அதிமுகவுக்கு உழைக்கும் உன்னதத் தொண்டன்தான் செங்கோட்டையன்; கட்சிக்காக தொடர்ந்து குரல் கொடுப்பவர். எதையும் எதிர்பார்க்காமல் உழைப்பவர். நானும் அவரும் இணைந்து கட்சிக்காக பணியாற்றி இருக்கிறோம். ஆர்.பி.உதயகுமார், ஜெயக்குமாருக்கு எல்லாம் பதில் சொல்ல நான் தயாராக இல்லை. அவர்கள் பேசுவதை பேசட்டும்; மக்கள் பார்த்துக்கொள்வார்கள். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்றுதான் அம்மாவின் தொண்டர்கள் விரும்புகின்றனர்.
அதுவே எங்களின் நோக்கம். கட்சி ஒன்றிணைந்தால்தான் தேர்தலில் வெல்ல முடியும் என்பதை தொண்டர்கள் உணர்ந்துள்ளனர். கட்சி ஒருங்கிணைப்புக்கான பேச்சு நடக்கிறது; அந்த ரகசியத்தை வெளியே சொல்ல முடியாது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் வாக்கு குறைந்துள்ளது. 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளனர். 13 இடங்களில் 3-ம் இடத்திற்கு சென்றுள்ளனர். அதிமுகவின் விசுவாச தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் நிற்கிறார்கள். மக்களும் எங்களுக்குத்தான் ஆதரவு தந்து கொண்டிருக்கிறார்கள். அமித்ஷா சொன்ன வியூகங்களை ஏற்காததற்கான பலனை எடப்பாடி பழனிசாமி இன்று அனுபவிக்கிறார். இடைத்தேர்தலில் போட்டியிட முடியாத அளவுக்கு எடப்பாடி பழனிசாமி பயத்தில் உள்ளார். எதற்கு அந்த பயம்?. இவ்வாறு அவர் கூறினார்.