– ஐங்கரன் விக்கினேஸ்வரா
( ஐரோப்பாவிற்கான இராணுவம் அவசியம் என்று உக்ரைன் கோருவது, ஐரோப்பாவில் நீண்ட கால போர்க் பகைமை சூழலையே ஏற்படுத்தும். இதனை உடனடியாக சில ஐரோப்பிய நாடுகள் ஆதரிக்க முற்பட்டாலும் நீண்ட காலத்தில் சாத்தியங்கள் குறைவே.
அதேவேளை டிரம்பின் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், உக்ரைன் நேட்டோவில் இணையும் யோசனையை நிராகரித்துள்ளார். உக்ரைனின் நேட்டோ நம்பிக்கைகள் மற்றும் 2014க்கு முந்தைய எல்லைகள் யதார்த்தமானவை அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்)
ஐரோப்பாவிற்கான இராணுவம் அவசியம் என உக்ரைன் ஜனாதிபதி விலொடிமிர் ஜெலென்ஸ்கி ஜேர்மனியில் அவசர அவசரமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐரோப்பிய இராணுவம் :
கடந்த வாரம் ஜேர்மனியின் மியுனிச்சில் இடம்பெற்ற பாதுகாப்பு உச்சிமாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நீண்டகால பழமை வாய்ந்த உறவு முடிவிற்கு வருகின்றது என அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடிவன்ஸ் தெரிவித்துள்ளார் என உக்ரைன் ஜனாதிபதி ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். ஆயினும் இதனை அமெரிக்க- ஐரோப்பிய இராஜதந்திரிகள் இதுவரை மறுக்கவில்லை.
விரைவில் அமெரிக்க – ரஷ்ய சமாதான பேச்சுவார்த்தைகள் சவூதி அரேபியாவில் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை எதிர்க்கும் வண்ணம், எங்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாமல் எங்களின் முதுகின் பின்னால் செய்து கொள்ளப்படும் எந்த உடன்படிக்கையையும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் ஐரோப்பாவிற்கு உதவி செய்வதற்கு அமெரிக்கா முன்வராது எனும் தோற்றப்பாட்டில் உக்ரைன் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
உக்ரைனிற்கு போதிய பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்காததால், எங்களை பாதுகாக்காததால் அமெரிக்காவிற்கு உக்ரைனின் கனியவளங்களை வழங்கும் திட்டத்தை தடுத்து நிறுத்தியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவிற்கு அச்சுறுத்தல் என வரும்போது அமெரிக்கா உதவிக்கு வராது என்பதற்கான சாத்தியக் கூறுகளை நாங்கள் நிராகரிக்க முடியாது என உக்ரைன் ஜனாதிபதி மிகக் காட்டமாக தெரிவித்துள்ளார்.
தனது சொந்த இராணுவத்தை கொண்ட ஐரோப்பா குறித்து பல தலைவர்கள் விருப்பம் வெளியிட்டுள்ளனர். ஐரோப்பிய இராணுவம் உருவாக்குவது குறித்து அவர்கள் சாதகமான பதில்களை தெரிவித்துள்ளனர் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா – ரஷ்ய பேச்சுவார்த்தை:
விரைவில் நிகழவுள்ள இருதரப்பு அமெரிக்கா – ரஷ்ய அமைதிப் பேச்சுவார்த்தைகளை, ஜெலென்ஸ்கி தனக்குப் பிடித்தபடி- தனது நிகழ்ச்சி நிரலுக்கேற்ப நிராகரிக்க முடியும்.
ஆயினும் டிரம்ப் எந்தவொரு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலையீடும் இல்லாமல் புட்டினுடன் ஒரு அமைதி ஒப்பந்தத்தை மேற்கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் இங்கிலாந்து பிரதமர் கெயார் ஸ்டார்மர் உக்ரைனுக்கு பிரித்தானிய துருப்புக்களை அனுப்பத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.
உக்ரைனின் நேட்டோவில் இணையும் முயற்சியை எப்போதும் இங்கிலாந்து ஆதரிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நேட்டோவின் எதிர்காலத்தில் உக்ரைன் இணைவதற்கு அவசியமானதாக பார்க்கவில்லை என்று டிரம்ப் நிர்வாகம் மிகத் தெளிவாகக் கூறிய போதிலும், இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கவில்லை.
இருப்பினும் மியூனிக் பாதுகாப்பு மாநாட்டிற்கு முன்னதாக ஜெலென்ஸ்கியுடன் பேசிய ஸ்டார்மர், நேட்டோ கூட்டணிக்கு உக்ரைனின் மாற்ற முடியாத இலக்கை அடையும் பாதைக்கு இங்கிலாந்தின் முழு ஆதரவையும் உறுதியளித்தார்.
நேட்டோவில் உக்ரைனுக்கு இடமில்லை:
இதற்கிடையில், டிரம்பின் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், உக்ரைன் நேட்டோவில் இணையும் யோசனையை நிராகரித்துள்ளார். உக்ரைனின் நேட்டோ நம்பிக்கைகள் மற்றும் 2014 க்கு முந்தைய எல்லைகள் யதார்த்தமானவை அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆயினும் டிரம்ப் உண்மையில் ரஷ்யாவுடன் எங்கு நிற்கிறார் என்பதைக் கண்டுபிடிக்க ஐரோப்பா போராடி வருகிறது. ரஷ்யாவுடன் எப்போதும் நட்புச் சூழ்நிலையை உருவாக்க டிரம்ப் முயன்று வருகிறார். ஆயினும் ஐரோப்பிய நாடுகள் மத்தியில் ரஷ்யாவை பகைப்பது என்பது பலருக்கும் தெரிந்த விடயம் தான். ஆயுத விற்பனைக்கும் போர்ப்பகைமை சூழலை தங்கள் அரசியல் இலாபங்களுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.
உக்ரைனில் பிரித்தானிய துருப்புக்கள்:
அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றுவதால், இங்கிலாந்து தனது துருப்புக்களை உக்ரைனுக்கு அனுப்ப வாய்ப்புள்ளது என்று பிரதமர்
கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களை விரைவு படுத்துவதில் இங்கிலாந்து முன்னணிப் பங்காற்றத் தயாராக உள்ளது.
தேவைப்பட்டால், நமது சொந்தப் படைகளை தரையில் நிறுத்துவதன் மூலம் உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களுக்கு பங்களிக்கத் தயாராகவும் விருப்பமாகவும் இருப்பதும் இதன் பொருள் என்றும் அவர் தெரிவித்தார்.
உக்ரைன் நாட்டுக்கு பிரிட்டிஷ் படைகள் அனுப்புவதை நான் எளிதாகச் சொல்லவில்லை. பிரிட்டிஷ் படைவீரர்களையும் பெண்களையும் ஆபத்தில் ஆழ்த்துவதில் வரும் பொறுப்பை நான் மிகவும் ஆழமாக உணர்கிறேன்.
உக்ரைன் நாட்டுக்கு குறைந்தளவு 100,000 பிரித்தானிய துருப்புக்கள் தேவைப்படலாம் என்று மதிப்பிடுகின்றனர். ஆனால் உண்மையில் யார் தான் ரஷ்யாவை எதிர்த்து போரிட போகின்றார்கள் என பிரித்தானிய அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் பிரிட்டனின் இராணுவம் வளங்களால் நிரம்பி வழிவதில்லை என்பதும் மற்றொரு முக்கிய விடயமாகும். மேலும் இங்கிலாந்து ஜெனரல்கள் அதிக பாதுகாப்பு செலவினங்களைக் தற்போது கோரி வருகின்றமை அரசுக்கு உள்ள பாரிய தலைவலியாகும்.
இவை எல்லாவற்றவையும் விட பிரித்தானிய பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை இன்னோர் நாட்டில் பலிக்கடாவாக்க சம்மதிக்க மாட்டார்கள். இரண்டாம் உலகப் போரின் பின்னர் பிரித்தானிய படைகள் எந்தவொரு பாரிய படை நகர்த்தல்களையும் நடாத்தவில்லை.
அமெரிக்காவை மீறி பிரித்தானியத் துருப்புக்கள் உக்ரைன் போரில் கலந்து கொள்வது சாத்தியமற்ற ஒரு செயலாகவே கருதப்படுகிறது. பிரித்தானிய துருப்புக்கள் உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எல்லாம் தேர்தல் அரசியல் ரீதியான இலாபங்களுக்கான வாய்ச்சவாடல்களாகவே கருதப்படுகின்றன.