இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்க அரசு வழங்கி வந்த ரூ.182 கோடி நிதியுதவியை நிறுத்துவதாக எலான் மஸ்க் தலைமையிலான டிஓஜிஇ குழு அறிவித்திருந்தது.
இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்பிடம் கேட்டபோது, நாங்கள் ஏன் இந்தியாவுக்கு நிதி கொடுக்க வேண்டும். அவர்களுக்கு ஏன் ரூ.182 கோடி கொடுக்க வேண்டும். அவர்களிடமே நிறைய பணம் உள்ளது. உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இறக்குமதி வரி அதிகமாக இருப்பதால் அமெரிக்க பொருட்களை இந்தியாவுக்கு கொண்டு போய் சேர்ப்பதே மிகவும் கடினமாக இருக்கிறது. இந்தியா மீதும் பிரதமர் மோடி மீதும் எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. ஆனால் இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்கா ஏன் நிதி தர வேண்டும் என்று கூறினார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் வெள்ளை மாளிகைக்கு வந்து சென்றதையும் அவர் குறிப்பிட்டார். சமீபத்தில் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடியிடம், அமெரிக்க பொருள்களுக்கு நட்பு நாடுகள் அதிக இறக்குமதி வரி போடுவதால் அமெரிக்க பொருட்களை அங்கு கொண்டு போய் சேர்ப்பது மிகவும் கடினமாக இருப்பதாகவும், இந்தியா அதிக இறக்குமதி வரி விதிப்பதாகவும் அமெரிக்க பொருட்களை அங்கு விற்பனை செய்ய முடியவில்லை என்று டிரம்ப் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.