கடந்த 2022-ம் ஆண்டு, கார்த்தியின் நடிப்பில் வெளியான படம் ‘சர்தார்’. இப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கினார். இப்படத்தில் லைலா, ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா, யூடியூப் பிரபலம் ரித்விக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். தேசத்துரோகி என்று முத்திரை குத்தப்பட்ட உளவாளி, உண்மையில் தேசநலனுக்காக எத்தகைய தியாகங்களைச் செய்கிறார் என்பதே படத்தின் கதை. இதில் அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் கார்த்தி. அதைத்தொடர்ந்து பி.எஸ். மித்ரன், கார்த்தி கூட்டணியில் சர்தார் 2 திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. இதில் எஸ் ஜே சூர்யா, மாளவிாக மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, விஜய் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ‘சர்தார் 2’ படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் வெளியீடு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
