ஜப்பான் முன்னாள் பிரதமர் புமியோ கிஷிடா, கடந்த 2023-ம் ஆண்டு வாகயாமா நகரில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, அவர் மீது பைப் வெடிகுண்டு வீசப்பட்டது. ஆனால் இந்த தாக்குதலில் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்டவில்லை. அருகில் நின்றிருந்த 2 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய ரியுஜி கிருமா என்ற வாலிபர் உடனடியாக கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணை வாகயாமா மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணையின் ஆரம்பத்தில், தான் குற்றம் செய்யவில்லை என்றும், கிஷிடாவை கொல்லும் நோக்கம் தனக்கு இல்லை என்றும் கூறினார். இவ்வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. ரியுஜி கிருமா (வயது 25) மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானதால் அவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
