தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசில் நாட்டில் கடந்த 2022-ம் ஆண்டு அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில், முன்னாள் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோவுக்கு தோல்வி ஏற்பட்டது. ஆனால், ஆட்சி அதிகாரத்தில் தொடர்வதற்காக அவர் சில சதித்திட்டங்களை தீட்டியுள்ளார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன்படி, தற்போது அதிபராக பதவி வகித்து வரும் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவுக்கு விஷம் கொடுக்கவும் மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியை கொல்லவும் சதித்திட்டம் தீட்டினார் என குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இதுபற்றி அந்நாட்டின் அரசு தரப்பு வழக்கறிஞரான பவுலோ கோனெட் கூறும்போது, ஆட்சியில் தொடர வேண்டும் என்பதற்காக பொல்சனாரோ மற்றும் 33 பேர் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியிருக்கின்றனர். பொல்சனாரோவின் எதிரியான சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அலெக்சாண்டர் டி மோரேஸ் என்பவரை சுட்டு கொல்ல திட்டமிடப்பட்டு உள்ளது. அப்போது, அதிபர் மாளிகையில் இதற்கான திட்டம் தீட்டப்பட்டு உள்ளது. இந்த திட்டம் பற்றிய விவரம் பொல்சனாரோவிடம் கொண்டு செல்லப்பட்டது. அவரும் அதற்கு ஒப்புதல் அளித்து விட்டார் என 272 பக்க குற்றச்சாட்டு அறிக்கையில் கோனெட் குறிப்பிட்டு உள்ளார். எனினும், பொல்சனாரோ தரப்பு கூறும்போது, சட்டத்தின் ஜனநாயக விதியை சீர்குலைக்கும் நோக்குடன் செயல்பட கூடிய எந்தவொரு இயக்கத்திற்கும் பொல்சனாரோ ஒருபோதும் ஒப்புதல் அளித்தது கிடையாது என தெரிவித்து உள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை பற்றி உச்சநீதிமன்றம் ஆய்வு செய்யும். அது ஏற்கப்பட்டால், அதனடிப்படையில், பொல்சனாரோவுக்கு எதிராக வழக்கு விசாரணை நடைபெற கூடும் என கூறப்படுகிறது.
