அமெரிக்காவில் புதிதாக அதிபராக கடந்த ஜனவரி 20-ல் டொனால்டு டிரம்ப் பதவியேற்று கொண்ட பின்னர் பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அவருடைய அமைச்சரவையில் பலரை நியமித்து வருகிறார். இதன்படி, டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க், டிரம்ப் அரசில், அரசாங்க திறனுக்கான துறையின் தலைவராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், பாக்ஸ் நியூஸ் ஊடகத்திற்கு எலான் மஸ்க் அளித்துள்ள பேட்டியில், 2 டிரில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தக பற்றாக்குறையானது, முந்தின அரசிடம் இருந்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு வந்து சேர்ந்துள்ளது. இந்த பற்றாக்குறையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அப்படி செய்ய தவறினால், அமெரிக்கா திவாலாகி விடும் என எச்சரித்து உள்ளார். அமெரிக்காவின் நிதியுதவி செலவிடுதல் பற்றி கடுமையாக விமர்சித்த மஸ்க், நாட்டில் வரி செலுத்தும் சராசரி அமெரிக்க குடிமகன், பைத்தியக்காரனாக இருக்க வேண்டும். ஏனெனில், அவர்களின் வரி பணம் மோசம் வாய்ந்த வகையில் செலவிடப்படுகிறது என்றார்.
