”உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் ,மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச் செயலாளராகவிருந்த சத்தியலிங்கத்தின் பதவி விலகலுக்கும் சுமந்திரனின் பதவி ஏற்புக்கும் பின்னால் ,”அன் கிளீன் தமிழரசுக்கட்சி”(Unclean Tamil Arasu Party)த் திட்டங்கள் உள்ளன. தற்போது வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் ஆசை காட்டி சத்தியலிங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியை கைமாற்றியுள்ள சுமந்திரன், சத்தியலிங்கம் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்படும்போது அவரின் தேசியப்பட்டியல் ஆசனம் ஊடாக பாராளுமன்றம் செல்வதே திட்டம்”
கே.பாலா
இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவராக பேராசைப்பட்டு அதில் படு தோல்வி கண்ட நிலையில் ”உள்வீட்டு” கலகங்களில் ஈடுபட்டு தமிழ் தேசிய அரசியலையும் தமிழரசுக் கட்சியின் நற்பெயரையும் அதன் கட்டுக்கோப்பையும் நாடளாவிய ரீதியில் நாறடித்து வந்த மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் எனப்படும் எம்.ஏ. சுமந்திரன் தற்போது இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச் செயலாளர் பதவியைக் கைப்பற்றி யுள்ளார்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர்கள் அழுத்தங்களினாலும் அடக்குமுறைகளினாலும் சகுனித் தனங்களினாலும் சுதந்திரமாக செயற்படமுடியாமையினாலும் பதவி விலகிவரும் பட்டியலில் இறுதியாக பதில் பொதுச் செயலாளராக இருந்த மருத்துவர் ப.சத்தியலிங்கமும் பதவியிலிருந்து விலகியதன் அடிப்படையில் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் சுமந்திரன் பதில் பொது செயலாளர் பதவியைக் கைப்பற்றியுள்ளார்.
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் உள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான இரா.சாணக்கியனின் அலுவலகத்தில் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் கடந்த 16 ஆம் திகதி இடம் பெற்றது.இக்கூட்டத்தில் இதுவரை பதில் பொதுச் செயலாளர் பதவியில் இருந்த மருத்துவர் ப.சத்தியலிங்கம் எம்.பி. சுகவீனம் காரணமாக பதவியில் தான் தொடர்ந்து இருக்க முடியாது என அறிவித்தமையை அடுத்து சத்தியலிங்கத்துக்கு அடுத்து கட்சியில் துணைச் செயலாளராக இருந்த சுமந்திரனைப் பதில் பொதுச் செயலாளராக நியமிப்பது என மத்திய குழு தீர்மானித்தது.
ஆனால் சுமந்திரனை பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கும் முடிவுக்கு 2024 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியின் தலைவராக பொதுக்குழுவில் வாக்கெடுப்பின் மூலம் வெற்றிபெற்று சுமந்திரனை தோற்கடித்து நீதிமன்ற தடைஉத்தரவினால் பதவியேற்கமுடியாத நிலையில் இருப்பவரான தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக் குழு தலைவரான சிறீதரன் எம்.பி., அப்போது தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்டவரான ஸ்ரீநேசன் எம்.பி. மற்றும் சிறீதரனுடன் இணைந்து சுமந்திரனை எதிர்த்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு பின்னர் விலகி சிறீதரனுக்கு ஆதரவளித்தவரான முன்னாள் எம்.பி. யோகேஸ்வரன் ஆகியோர் தமது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். எனினும், அவர்களின் எதிர்ப்பை மீறி பதில் பொதுச் செய லாளர் பதவி சுமந்திரனின் கைகளுக்கு சென்று விட்டது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச் செயலாளராக இருந்த மருத்துவர் ப.சத்தியலிங்கம் பதவி விலக்கியமைக்கும் அந்தப்பதவியை சுமந்திரன் ஏற்றுக்கொண்டமைக்கும் பின்னால் பல தந்திரங்கள்,சதுரங்க ஆட்டங்கள் ,”அன் கிளீன் தமிழரசுக்கட்சி”(Unclean Tamil Arasu Party)த் திட்டங்கள் இருப்பதாக ”உள்வீட்டு”த் தகவல்கள் கூறுகின்றன. மருத்துவர் சத்தியலிங்கத்திற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் ஆசை காட்டப்பட்டு, பேரம் பேசப்பட்டே தற்போது பொதுச் செயலாளர் பதவியிலிருந்து இராஜிநாமா செய்ய வைக்கப்பட்டதாகவும் மாகாண சபைகளுக்கான தேர்தல் அறிவிக்கப்படும்போது அவர் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் இராஜிநாமா செய்வதும் அப்போது சுமந்திரன் அந்த தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்வதும் திட்டம் எனவும் தெரியவருகின்றது.
ஆனால் பாராளுமன்றத் தேர்தல் நடக்கவிருந்த காலப்பகுதியில் ”தமிழரசுக்கட்சியில் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைபவர்கள் எக்காரணம் கொண்டும் தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றம் அனுப்பப்படமாட்டார்கள். அது நானாக இருந்தாலும் பொருந்தும்”என பல இடங்களில் உறுதிபட சுமந்திரன் தெரிவித்திருந்தார். தேர்தலில் தோல்வியடைந்த பின்னரும் ‘இந்த நிலைப்பாட்டில் நான் தொடர்ந்தும் உறுதியாக உள்ளேன்”எனவும் சுமந்திரன் மீண்டும் உறுதிப்படுத்தியிருந்தார். ஆனால் பதவி ஆசை யாரைத்தான் விட்டது என்பதுபோன்று தற்போது அவரின் நிலைப்பாடு மாறி வருவதாகவே தெரிகின்றது.
இதேவேளை பொதுச்செயலாளர் பதவி துறப்பு -ஏற்புக்கு பின்னால் உள்ள இன்னொரு கதையும் கூறப்படுகின்றது. அதாவது இலங்கை தமிழரசுக்கட்சியிலிருந்து இம்முறை பாராளுமன்றத்தேர்தலில் போட்டி யிட்டதன் மூலம் 7 எம்.பி. க்களும் தேசியப்பட்டியல் மூலமாக ஒரு எம்.பி.யுமாக 8 எம் .பி. க்கள் பாராளுமன்றத்தில் உள்ளனர்.இதில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆசனங்களில் சிரேஷ்டத்துவத்தின் அடிப்படையில் சிறீதரன் ,சாணக்கியன் ஆகிய இருவருக்கும் முன்வரிசை ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் இதில் சாணக்கியனை விட சிரேஷ்ட தலைவரான ஸ்ரீநேசனுக்கு இரண்டாவது வரிசை ஆசனமே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சாணக்கியனுக்கு முன்வரிசை ஆசனம் வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத்தெரிவித்து சிறீதரன் எம்.பி. பாராளுமன்ற செயலாளருக்கு கடிதம் கொடுத்தாக சுமந்திரன் தரப்பால் கதைகள் வெளியிடப்பட்டன.
இதே நேரம் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் வந்த சத்தியலிங்கம் கட்சியின் சிரேஷ்ட தலைவராகவும் பொதுச் செயலாளராகவும் இருக்கின்றபோதும் அவருக்கும் 4 ஆவது வரிசையிலிலேயே ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் கட்சியின் பொதுச் செயலாளர் என்ற வகையில் தனக்கு முதல்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட வேண்டுமென சத்தியலிங்கம் பாராளுமன்ற செயலாளருக்கு கடித்த கொடுத்துள்ளதாகவும் இதனால் சுமந்திரனின் தீவிர விசுவாசியான சாணக்கியனின் முன்வரிசை ஆசனம் பறிபோகக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாலேயே தாலும் சத்தியலிங்கத்தின் பொதுச் செயலாளர் பதவி கைமாறப்பட்டு சாணக்கியனின் முதல் வரிசை ஆசனமும் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு தகவல் உண்டு.
ஏனெனில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கு கிடைத்த ஒரேயொரு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பெண் ஒருவர் நியமிக்கப்படுவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் பதவியில் இருந்த மருத்துவர் சத்தியலிங்கம் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அறிவிக்கப்பட்டார். தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஆசனம் வழங்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சத்தியலிங்கத்திடம் நீங்கள் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் தொடருவீர்களா எனக்கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர் பதில் வழங்குகையில், எனது தொழில் அரசியல் அல்ல, நான் ஒரு வைத்தியர். கட்சி இந்த பதவியை தராவிட்டால் மீண்டும் ஒரு அரச உத்தியோகத்தராக செயற்படும் எண்ணத்திலே இருந்தேன்.வன்னி மாவட்டமானது திட்டமிட்ட இன அழிப்பு இடம்பெறுகின்ற ஒரு பிரதேசம். எனவே அதை உணர்ந்து செயற்படக்கூடிய ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் தேவையை அறிந்து கட்சி இந்த ஆசனத்தை வழங்கியுள்ளது. இனிவரும் ஐந்து வருடங்களில் சத்தியலிங்கம் எப்படி செயற்படுவார் என்பதை அனைவரும் நிச்சயமாக பார்ப்பீர்கள்.கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலும் தொடருவேன் அது பொதுச்சபையில் தீர்மானிக்கப்படக்கூடிய ஒரு விடயம் அதனை விடுவதற்கான சந்தர்ப்பம் இன்னும் எற்ப்படவில்லை என்றார்.ஆனால் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்று 3 மாதங்களுக்குள் பொச்து செயலாளர் பதவியிலிருந்து விலகவேண்டிய நிலை அல்லது நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டில் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளராக செயற்பட்டு வந்த கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் கி. துரைராஜசிங்கம் தனது பதவியில் இருந்து இராஜிநாமா செய்ததை அடுத்து, பொதுச்செயலாளர் பதவி வெற்றிடமாகக் காணப்பட்டு வந்தது. இந்நிலையில் கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதற்காக,கட்சி மட்டத்தில் பொதுச்செயலாளரொருவரை நியமிக்கும் பொருட்டு துணைத்தலைவர்களாக செயற்பட்டு வந்த மருத்துவர் ப. சத்தியலிங்கம் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரில் ஒருவரை பொதுச்செயலாளராக நியமிக்க உத்திதேசிக்கப்பட்டிருந்தது.எனினும் சுமந்திரன் தமிழரசுக்கட்சியின் தலைவர் பதவியிலேயே குறியாக இருந்ததால் சத்தியலிங்கம் பதில் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு பொதுக்குழுவில் வாக்கெடுப்பு மூலம் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட சிறீதரன் தலைவர் பதவிக்கான போட்டியில் தன்னை எதிர்த்து போட்டியிட்டு தோற்றவரான சுமந்திரனை பொதுச்செயலாளராக மத்திய குழுக் கூட்டத்தில் முன்மொழிந்திருந்த நிலையில், அதற்கு சுமந்திரன் மறுப்பு தெரிவித்திருந்தார்.தான் கிழக்கு மாகாணத்திற்கு பொதுச்செயலாளர் பதவி தருவதாக கூறி இருந்தேன். அதை மீற மாட்டேன். கிழக்கிற்கே பொதுச்செயலாளர் பதவியை வழங்குங்கள் என்று கூறி இருந்தார்.ஆனால் தற்போது சத்தியலிங்கம் பதவி விலகிய நிலையில் சுமந்திரன் கிழக்கு மாகாணத்திற்கு கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றாது பதில் பொது செயலாளராகியுள்ளார்.
இவ்வாறான நிலையில்தான் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் ,மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில் சத்தியலிங்கத்தின் பதவி விலகலுக்கும் சுமந்திரனின் பதவி ஏற்புக்கும் பின்னால் ,”அன் கிளீன் தமிழரசுக்கட்சி”(Unclean Tamil Arasu Party)த் திட்டங்கள் இருப்பதாக ”உள்வீட்டு”த் தகவல்கள் கூறுகின்றன. அதாவது மத்திய குழு உறுப்பினராக , கட்சியின் பேச்சாளராக, துணை பொதுச் செயலாளராக இருந்து கொண்டே தமிழரசுக்கட்சியை ஆட்டிப்படைத்து தமக்கு போட்டியாளர் எனக்கருதியவர்களை, தமது அரச விசுவாசத்துக்கு எதிரானவர்களை,அதிகமாக தமிழ் தேசியம் பேசியவர்களை ,தமிழின உணர்வாளர்களை வெளியேற்றிய, ஓரம் கட்டிய . செயற்பட முடியாத நிலையில் வைத்துள்ள சுமந்திரனின் ஆட்டம் இனித்தான் அதிகார பூர்வமாக அதிகரிக்கப் போகின்றது.
ஏப்ரல் நடுப்பகுதியில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் சிறீதரன் ஆதரவு வேட்பாளர்களை அடியோடு நிராகரிக்கவும் தனது விசுவாச வேட்பாளர்களை நிறுத்தி தமிழரசுக்கட்சியை முழுமையாக தனது கட்டுபாட்டுக்குள் கொண்டு வருவதுடன் அதன் தொடர்ச்சியாக மாகாண சபைக்கான தேர்தலிலும் தனது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றியை உறுதி செய்து அதன்மூலம் சில கட்சிகளை கூட்டிணைத்து முதலமைச்சர் பதவியில் அமர்வதும் சுமந்திரனின் இந்த பொதுச் செயலாளர் பதவியேற்பின் மறைமுக நிகழ்ச்சி நிரலாக இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் இலகுவில் நிராகரித்து விட முடியாது.
எது எப்படியோ சுமந்திரன் தனது இலக்குகளில் ஒன்றைக் கைப்பற்றியிருப்பது அவருக்கும் அவரது தீவிர விசுவாசிகளுக்கும் ஒரு வெற்றியாக , எதிர்காலத்தில் தமிழரசுக்கட்சிக்குள் இரு அணிகள் இருக்க முடியாத , சுமந்திரனுக்கு எதிரான அணி வலுவிழக்கச்செய்யப்பட்ட, கட்சி சார்பில் எந்த தீர்மானங்களையும் சுமந்திரன் தனி ஒருவனாக எடுக்கக் கூடிய சூழலை ஏற்படுத்தியிருந்தாலும் ஒட்டு மொத்த தமிழரசுக்கட்சிக்கும் சுமந்திரன் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச் செயலாளராகிருப்பது ”சத்திரசிகிச்சை வெற்றி -நோயாளி மரணம்” என்ற நிலையாகவே உள்ளது.