(அபூ ஷைனப்)
ஓய்வுநிலை அதிபர் எம்.எல்.எம். இஸ்மாயில் எழுதிய “கல்விப் பணியில் சவால்களும் சாதனைகளும்”. என்ற நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் 23/02/2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு சிம்பலாகஸ்கொட்டுவ மதீனா தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் கவிஞர் ரவூப் ஹஸீர் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வின் பிரதம அதிதிகளாக அதிபர் இஸ்மாயில் அவர்களின் மாணவர்களான கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை பேராசிரியர் எம்.டி.எம் மஹீஷ், வடமேல் மாகாண மேலதிக கல்வி பணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்றிருக்கும் யூ.எம். பி. ஜெயந்திலா ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
கௌரவ மற்றும் சிறப்பு அதிதிகளாக அதிபர் இஸ்மாயில் அவர்களினால் உருவாக்கப்பட்டு கல்விப்புலத்தில் உயர் பதவிகள் வகிக்கின்ற இந்தப் பாடசாலையின் பழைய மாணவர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நூல் பற்றிய நயவுரையை ஓய்வு பெற்ற குளியாப்பிட்டிய வலயக்கல்வி பணிப்பாளர் எம்.ஏ. ஜி. அஷ்ரப் வழங்க உள்ளார். நூலின் முதல் பிரதியை மதீனா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் எம்.ஆர்.எம் இம்ரான் பெற்றுக் கொள்வார். ஏற்புரையும் நன்றியுரையும் நூலாசிரியர் ஓய்வு பெற்ற அதிபர் எம்.எல்.எம். இஸ்மாயில் அவர்கள் வழங்குவார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பும் தொகுப்பும் மதீனா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் கவிஞர் நாச்சியாதீவு பர்வீன் மேற்கொள்வார்.
“கல்விப் பணியில் சவால்களும் சாதனைகளும்”என்ற இந்நூலானது கல்விப் புலத்தில் இயங்குகின்றவர்களுக்கு உசாத்துணை நூலாக அமையும். கல்வி முகாமைத்துவம் மற்றும், பாடசாலை முகாமைத்துவம் போன்ற செயற்பாடுகளில் ஒரு அதிபர் எதிர்நோக்குகின்ற சவால்களை அடையாளப்படுத்தி அவற்றை சமயோசிதமாக தீர்த்து வைக்கின்ற வழிவகைகளை சொல்லி நிற்கிறது இந்த நூல்.