சுமந்திரன் தமிழரசுக் கட்சி மீதான தன்னுடைய பிடியை இறுக்கி வருகிறார். அதாவது சிறீதரன் மேலும் பலவீனமாக்கப்பட்டிருக்கிறார். கட்சி தொடர்ந்தும் நீதிமன்றத்தில்தான் நிற்கப் போகிறது என்று தெரிகிறது.ஆயின்,வரவுள்ள தேர்தல்களை அக்கட்சி எவ்வாறு அணுகப்போகிறது?
தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள பெரிய கட்சி, தான் மட்டுமே என்று அந்தக் கட்சி நம்புகிறது. சிவப்பு மஞ்சள் கொடியை அசைத்தால் வாக்குகள் திரளும் என்றும் நம்புகிறது. எனவே உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களிலும் தன்னால் தனித்து நின்று குறிப்பிடத்தக்களவு ஆசனங்களைப் பெற முடியும் என்று அந்த கட்சி நம்புகின்றதா?
ஆனால் சிவப்பு மஞ்சள் கொடிகளை அசைப்பதால் மட்டும் அல்லது “தாயகம் தேசியம் சுயநிர்ணயம்” என்று தொடர்ச்சியாக மந்திரம் போல சொல்வதனால் மட்டும் தமிழ் வாக்குகளைத் திரட்டி விட முடியாது என்பதைத் தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நிரூபித்து இருக்கிறது.அதிலிருந்தும் கற்றுக் கொள்ளவில்லை என்றால் வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய தரப்பு தொடர்ந்து தோற்கப் போகிறதா ?
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தோல்விகளிலிருந்து பாடம் கற்றிருப்பதாகத் தோன்றுகின்றது.கடந்த பௌர்ணமி நாளன்று தையிட்டியில் நடந்த போராட்டம் ஒப்பீட்டளவில் வெற்றி. எனினும் அங்கே திரண்டது ஆயிரக்கணக்கான மக்கள் இல்லை.அந்தப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு உள்ள முக்கியத்துவம் என்னவென்றால், அந்தப் போராட்டத்தை தொடர்ந்து ஒரு பேசு பொருளாக வைத்திருந்தது அந்தக் கட்சிதான்.அதே சமயம் அந்தப் போராட்டத்தை அடுத்தடுத்த கட்டத்துக்கு மக்கள் மயப்படுத்தத்தவறியதும் அந்தக் கட்சிதான். அவர்களால் அந்தப் போராட்டத்தை மக்கள் மயப்படுத்த முடியவில்லை என்பது தான் சரி. கடந்த பௌர்ணமி நாளன்று ஏனைய கட்சிகளும் பங்குபற்றியதால் போராட்டம் ஒப்பீட்டுளவில் எழுச்சிகரமாக நடந்தது.
ஆனால் ஒவ்வொரு போயா தினத்தன்றும் போராடி தையிட்டியை மீட்க முடியாது. நில அபகரிப்புக்கும் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கும் எதிரான போராட்டம் மாதத்தில் ஒரு தடவை மட்டும் நடத்தப்படும் ஒன்றாக இருக்க முடியாது. ஏனென்றால் நில அபகரிப்பும் சிங்கள பௌத்த மயமாக்கலும் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பின் தொடர் நடவடிக்கைகள். பல தசாப்த கால தொடர்ச்சியான நடவடிக்கைகள். மிகவும் நிறுவனமயப்பட்ட, அதிக வளம் பொருந்திய அரசு உபகரணங்களால் முன்னெடுக்கப்படுகின்ற தொடர்ச்சியான நடவடிக்கைகள். இக்கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும்போது கூட எங்கேயாவது ஒரு சிறு குன்றில் ஒரு பௌத்த விகாரைக்கு ஒரு செங்கல் வைக்கப்பட்டிருந்திருக்கும்
அதாவது சிங்கள பௌத்த மயமாக்கல் நடவடிக்கைகள்,அதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால் தமிழ் மக்களின் தேசிய இருப்பை அழிக்கும் நடவடிக்கைகள் கடந்த பல தசாப்தங்களாக தொடர்ச்சியாக முன் எடுக்கப்பட்டு வருகின்றன.குறிப்பாக 2009க்கு பின்னரும் அது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ் எதிர்ப்புத்தான் குறைந்து போய்விட்டது. இப்படிப்பட்டதோர் பின்னணியில் நில அபகரிப்புக்கும் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கும் எதிராகத் தொடர்ச்சியாகப் போராட வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் தமிழ்த் தரப்புக்கு உண்டு. ஆனால் அடுத்த பௌர்ணமி வரை இன்னுமொரு எழுச்சிக்காகக் காத்திருக்க வேண்டிய நிலைமைதான் கள யதார்த்தமா?
கடந்த சில மாதங்களாக தமிழ்த்தேசியக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலைகளை கஜேந்திரகுமார் முன்னெடுத்து வருகிறார். ஆனால் அந்த ஒருங்கிணைப்பு முயற்சிகள் ஒரு புதிய யாப்பை உருவாக்கும் பொழுது தமிழ் தரப்பு தனக்கிடையே ஓர் ஐக்கியத்தைப் பேண வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலானவை. யாப்பு இப்போதைக்கு வருமோ இல்லையோ தெரியாது. ஆனால் தேர்தல் வரும் என்பது மட்டும் தெரிகிறது.
தேர்தல்களை நோக்கி தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழ் மக்கள் மத்தியில் இறங்கித் தீயாக வேலை செய்கிறது. ஆயின், வருமோ வராதோ என்று நிச்சயமாகத் தெரியாத ஒரு யாப்புருவாக்க முயற்சி நோக்கித் தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைப்பது சரியா? அல்லது நிச்சயமாக வரக்கூடிய தேர்தல்களை நோக்கி கட்சிகளை ஒருங்கிணைப்பது சரியா?
இந்த ஐக்கியம் தேர்தல்களை நோக்கமாகக் கொண்டது அல்ல என்ற ஒரு வியாக்கியானம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மத்தியில் இருப்பதாகத் தெரிகிறது.தேசத் திரட்சிக்கான ஐக்கியம் இது என்று அவர்கள் கூறுகிறார்கள்.ஆனால் தேர்தலும் தேசத் திரட்சிக்குள் அடங்கும். தேசத்தைத் திரட்டுவதற்கு உரிய உபாயங்கள் என்று பார்த்தால் தேர்தலும் அதற்குள் வரும். தேர்தல் களம் என்பது ஒப்பீட்டளவில் அதிகரித்த ஜனநாயகப் பண்புடையது. கட்சிகள் வெற்றி வாய்ப்புகளை கவனத்தில் எடுத்து உற்சாகமாக, ஒரு விதத்தில் சுயநலத்தோடு உழைக்கும்.அந்தச் சுயநலம் சில சமயம் தேசத்தை திரட்டுவதற்கு எதிரானதுதான்.ஆனாலும் தேர்தல் களங்களில்தான் கட்சி அரசியல் அதிகம் சுறுசுறுப்பானதாக, உற்சாகமானதாக இருப்பதுண்டு. எனவே தேர்தல்களைத் தவிர்த்து விட்டு தேசத்தைத் திரட்டப் போகிறோம் என்பது நடைமுறைச் சாத்தியமானது அல்ல. தேர்தல்களில் தமிழ்த் தேசியத் தரப்பு தொடர்ந்து பின்னடைவைச் சந்திக்குமாக இருந்தால் அரசாங்கத்தின் கை மேலோங்கி விடும்.
அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த பிரதமர் ஹரிணியின் மேடை ஒன்றில் மானிப்பாயில், அமைச்சர் சந்திரசேகரன் ஆற்றிய உரை எதைக் குறிக்கின்றது? அவர் கூறுகிறார், சிறுவர் இல்லங்களில் பராமரிக்கப்படும் பெண்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாக. அதில் அவர் பாவித்த வார்த்தைகள் கடுமையானவை. பொது மேடையில் பயன்படுத்தக் கூடாதவை. சிறுவர் இல்லங்களில் பராமரிக்கப்படும் பெண்களை அந்த இல்ல நிர்வாகம் தவறாக நடத்துகின்றது அல்லது துஷ்பிரயோகம் செய்கிறது என்ற பொருள்பட அவருடைய உரை அமைந்திருந்தது. அவர் ஒரு அரசாங்க அமைச்சர். சிறுவர் நலன்களுக்கு பொறுப்பான, பெண்கள் நலன்களுக்குப் பொறுப்பான அமைச்சிடம் அதைக் கூறி உடனடியாகவே சட்ட நடவடிக்கை எடுக்கலாம். மானிப்பாயில் ஒரு பொது மேடையில் அதை அவர் கூற வேண்டிய தேவை என்ன?
அதுமட்டுமில்லை, அமைச்சர் சந்திரசேகரன் இந்திய மீனவர்களுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருக்கிறார். இது மீனவ அமைப்புகளைக் கவரும் நோக்கத்தைக் கொண்டது. இந்திய மீனவர்களால் பாதிக்கப்படும் மீனவர்களை இது உற்சாகப்படுத்தும். இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதன் மூலம் கரையோரப் பகுதியில் உள்ள வாக்காளர்களை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.
தையிட்டி விகாரை தொடர்பாக அரசாங்கம் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகள் எவற்றையும் இதுவரை எடுக்கவில்லை. படையினரிடமிருந்து அந்த விகாரை புத்தசாசன அமைச்சிடம் கைமாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் புத்த சாசன அமைச்சும் படைத்தரப்பும் வேறு வேறு அல்ல. இரண்டுமே ஒரே சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பின் நிகழ்ச்சிநிரலை முன்னெடுக்கும் வெவ்வேறு உபகரணங்கள்தான்.
படையினரிடமிருந்து விகாரையை புத்தசாசன அமைச்சு பொறுப்பெடுத்தால் அந்த விகாரைக்குள்ள ராணுவ பரிமாணம் குறைந்துவிடும். அதனால் தமிழ் எதிர்ப்பும் குறைந்து விடும் என்று அரசாங்கம் கணக்கு போடுகிறது. புத்த சாசன அமைப்பு பொறுப்பெடுத்தால் விகாரை வளாகத்தில் இருந்து படைத்தரப்பு சற்று விலகி நிற்கும். ஆனாலும் படைத்தரப்பின் நிழலில்தான் அந்த விகாரை தொடர்ந்தும் பாதுகாக்கப்படும்.
யாழ். நாக விகாரை ஆகட்டும், நைனா தீவில் உள்ள விகாரையாகட்டும் தையிட்டியில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜம்பு கோளப் பட்டணம் என்று பெயரிடப்பட்டிருக்கின்ற மாதகல் சம்பில் துறையைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள பௌத்த கட்டுமானங்களாகட்டும் எல்லாவற்றையும் படைத்தரப்புத்தான் பரிபாலித்து வருகின்றது. மன்னாரில் திருக்கேதீஸ்வரர் ஆலயத்துக்கு அருகே உள்ள விகாரையும் அப்படித்தான்.தொகுத்துச் சொன்னால் தமிழ்ப் பகுதிகளில் உள்ள எல்லா விகாரங்களும் பௌத்த மதக் கட்டுமானங்களும் ஏன் மரபுரிமை சொத்துக்கள் என்று அடையாளம் காணப்பட்ட அகழ்வாராய்ச்சி மையங்களும்கூட படைத்தரப்பினரால்தான் பாதுகாக்கப்படுகின்றன. படைத்தரப்பின் மேற்பார்வைக்குள்தான் அவை பரிபாலிக்கப்படுகின்றன.ஆயுதங்கள் இன்றி பாதுகாக்கப்படும் ஒரு புத்த விகாரையைக்கூட தமிழ்ப் பகுதிகளில் காட்ட முடியாது. இதுதான் இலங்கைத் தீவில் தேரவாத பௌத்தத்தின் நிலை.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னரும் இந்த நிலைமையில் மாற்றம் இல்லை. இந்த அரசாங்கம் ஏழைகளுக்கு நெருக்கமான ஒரு அரசாங்கமாகத் தன்னைக் காட்டிக் கொள்கிறது. எளிமையான ஒரு அரசாங்கமாக தன்னைக் காட்டிக் கொள்கிறது. இந்த வாரம் வெளியிடப்பட்ட வரவு செலவுத் திட்ட அறிக்கை ஏழை மக்களைக் கவரும் நோக்கிலானது என்று கூறப்படுகிறது. அந்த அறிக்கையை சமர்ப்பித்து ஆற்றிய உரையில் அனுரா பின்வருமாறு கூறுகிறார்…”எங்களில் யாரும் லஞ்சம் எடுப்பதில்லை. அப்படி எடுத்தால் அவர்களுக்கு எந்த மன்னிப்பும் கிடையாது. ஊழல் இல்லாத ஆட்சியை உருவாக்குவேன்.லஞ்சம் வாங்கப் பயப்படும் நாட்டை உருவாக்குவேன். அப்படிப்பட்ட ஆட்சியால் மட்டும்தான் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும்.”
அவர் கூறுவது சிங்கள மக்களுக்குப் பொருந்தலாம். ஆனால் தமிழ் மக்களுக்குப் பொருந்தாது.தமிழ் மக்கள் ஊழலுக்கு எதிராகவோ அரசு நிர்வாக துஷ்பிரயோகங்களுக்கு எதிராகவோ போராடவில்லை. நமது தேசிய இருப்பை அழிக்கமுப்படும் இன ஒடுக்கு முறைக்கு எதிராகத்தான் போராடி வருகிறார்கள். எனவே தமிழ் மக்கள் கேட்பது தமது தேசிய இருப்பை பாதுகாக்க வேண்டும் என்றுதான்.
ஊழலற்ற ஆட்சியால்தான் நாட்டைக் கட்டியெழுப்பலாம் என்று கூறுவது தவறு. இனவாதமற்ற,இன அழிப்புக்கு பரிகாரம் தரத் தயாராக உள்ள,அதாவது, இனப் பிரச்சினையைத் தீர்க்கத் தேவையான அரசியல் திட சித்தத்தை– “பொலிட்டிக்கல் வில்லைக்” –கொண்டிருக்கும் ஒரு அரசாங்கத்தால் மட்டுந்தான் இச்சிறிய தீவைக் கட்டியெழுப்ப முடியும்.